வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (15/09/2018)

கடைசி தொடர்பு:10:22 (15/09/2018)

‘மிரட்டக் காத்திருக்கும் பாக்., ரிஸ்க் எடுக்கும் இந்தியா’- இன்று தொடங்குகிறது ஆசியக் கோப்பை கிரிக்கெட்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

கிரிக்கெட்

14-வது ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தப்போட்டியில் மோதுகின்றன. இன்று தொடங்கி, வரும் செப்., 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. லீக் சுற்றின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா,பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் ‘ஏ’பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. கிரிக்கெட்டில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. எனவே, இந்தத் தொடரில் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற 13 தொடர்களில், இந்திய அணி அதிகபட்சமாக 6 முறை  சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை 5 முறையும், பாகிஸ்தான்2 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில், இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 25 ஆசியக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  6 சதம், 3 அரை சதங்களுடன் 1,220 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக, ஒரு போட்டியில் 130 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக  இலங்கையின் முன்னாள் வீரர் சங்ககாரா, 24 போட்டிகளில் 1075 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், 21 போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 14 போட்டிகளில் விளையாடி 766 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம், 2அரை சதங்கள் அடங்கும். 

ஆசியக் கோப்பைப் போட்டியில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி ஆசியக் கோப்பைப் போட்டிகளில் களமிறங்குகிறது. கோலி இல்லாததால், மிடில் ஆர்டரில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனுபவ வீரரான தோனி, அணியில் இருப்பது ஆறுதலான விஷயமாகும். நடப்பு சாம்பியனான இந்திய அணி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். துபாயில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் முதல் லீக் சுற்றுப் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.