வலியைப் போக்கத் தயாரானது பிரத்யேகக் காலணி!- தங்கம் வென்ற நாயகி ஸ்வப்னா மகிழ்ச்சி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனின் நீண்டகாலப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது. 

தங்கம் வென்ற நாயகி ஸ்வப்னா

ஜகார்த்தா ஆசியப் போட்டியில், ஹெப்டத்லான் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்றார். இந்தப் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்தது இதுவே முதல்முறை. ஸ்வப்னா தங்கம் வென்றதும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனார்ஜி ரூ.10 லட்சம் பரிசாக வழங்கியதோடு, அரசு வேலை அளிக்கவும் உத்தரவிட்டார். 

கொல்கத்தாவில் உள்ள ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர், ஸ்வப்னா.  ரிக்‌ஷா தொழிலாளியான இவரது தந்தை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுகையாகிவிட்டார். தந்தையை கவனித்துக்கொள்வதற்காக, தான் பார்த்துவந்த வேலையை அவரது தாய் விட்டுவிட்டார். அவரது சகோதரர் கூலி வேலை செய்துவருகிறார். ஸ்வப்னாவுக்கு இரு கால்களிலும் தலா ஆறு விரல்கள். இதனால், அவருக்கு சாதாரண காலணிகள் பொருந்தவில்லை. ஸ்வப்னாவுக்காக எந்த நிறுவனமும் பிரத்தியேகக் காலணி தயாரித்து வழங்க முன்வரவில்லை. இதனால், கால்களில் கடும் வலியுடன்தான் போட்டிகளில் கலந்துவந்துள்ளார்.

இப்படியான பல்வேறு இன்னல்களுக்கிடையே ஸ்வப்னா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். தங்கம் வென்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா, ``இனியாவது எனக்குக் காலணி நிறுவனங்கள் பிரத்யேகக் காலணி தயாரித்து வழங்க முன்வரும் என்று நம்புவதாகவும், அப்படி தயாரித்து அளித்தால் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்'' என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார். 

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய விளையாட்டு ஆணையத்திடம், மத்திய விளையாட்டு அமைச்சர் ரத்தோர் உத்தரவிட்டார். மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு, ஸ்வப்னாவுக்கு தற்போது பிரத்யேகக் காலணி கிடைக்க உள்ளது. இதுகுறித்து சாய் (Sports Authority of India) இயக்குநர் நீலம் கபூர் கூறுகையில், `மத்திய அரசின் உத்தரவை அடுத்து, ஸ்வப்னாவுக்கு சிறப்பான காலணியை பெற்றுத் தர ஏற்பாடுகளை மேற்கொண்டோம். அதன்படி, அடிடாஸ் நிறுவனத்துடன் பேசியுள்ளோம். அதோடு, ஸ்வப்னாவின் பயிற்சியாளரிடமும் பேசியிருக்கிறோம். விரைவில் ஸ்வப்னாவுக்கு பிரத்யேகக் காலணி கிடக்கும் என்ற நம்பிக்கை அதிக அளவில் உள்ளது' என்றார். இதை ஸ்வப்னாவும் உறுதிசெய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!