வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:47 (15/09/2018)

எனக்கு வயசாகிடுச்சா? - ‘ஹெவி வொர்க் அவுட்டில் யுவராஜ்’

இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யுவராஜ் சிங்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக களமிறங்கினார். இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலும் யுவராஜின் ஆட்டம் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 8 போட்டிகளில் விளையாடி வெறும் 65 ரன்களே எடுத்தார். அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தாண்டு உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவரால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். 

யுவராஜுக்கு வயசாகிடுச்சு அவரால் அணியில் இடம் பிடிப்பது கடினமான விஷயம் என சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யுவராஜ் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். `உன்னால் இதனைச் செய்ய முடியாது எனக் கூறாதீர்கள். அதை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம் என் இலக்கை அடைவேன். புதிய பருவத்துக்காக காத்திருக்கிறேன். எப்போதும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கும் அதை அடைவதற்கும் எதுவும் தாமதம் இல்லை' எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பழைய யுவராஜ் சிங்காக திரும்பி வாருங்கள். உங்களை பஞ்சாப் அணியில் பார்ப்பதைவிட இந்திய அணியில் பார்ப்பதையே நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.