வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:29 (15/09/2018)

கோலி இல்லா இந்தியா... மிரட்டும் பாகிஸ்தான், வங்கதேசம்... அமைதி இலங்கை... முந்துவது யார்!? #AsiaCupPreview

குரூப் ஏ பிரிவில் இருக்கும் இந்தியா அடுத்தவாரம் அடுத்தடுத்த நாள்களில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது. இந்திய அணியில் கோலி இல்லை என்பதுதான் பெரிய வெற்றிடம். கோலி இல்லாத இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகளை சமாளிக்குமா, யாருக்கு என்ன பலம்?

கோலி இல்லா இந்தியா... மிரட்டும் பாகிஸ்தான், வங்கதேசம்... அமைதி இலங்கை... முந்துவது யார்!? #AsiaCupPreview

இங்கிலாந்திலிருந்து ஃபோகஸ் துபாய், அபுதாபிக்கு மாறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என ஆறு நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை 2018 போட்டிகள் இன்று ஆரம்பம். இன்றைய ஆட்டத்தில் வங்கதேசமும், இலங்கையும் மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருக்கும் இந்தியா, அடுத்தவாரம் அடுத்தடுத்த நாள்களில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது. இந்திய அணியில் கோலி இல்லை என்பதுதான் பெரிய வெற்றிடம். கோலி இல்லாத இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகளை சமாளிக்குமா, யாருக்கு என்ன பலம்?

கோலி

ஃபார்மேட்!
ஆசியக் கோப்பையில் லீக் போட்டிகள் இரண்டு சுற்றுகளாக நடைபெற இருக்கின்றன. முதல் சுற்றில் ஏ, பி என இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஏ -பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி- பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. முதல் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது சுற்று நான்கு அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த சூப்பர் ஃபோரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும். 
இந்த ஃபார்மேட்படி இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இந்த சீரிஸில் மூன்றுமுறைகூட மோதும் வாய்ப்புகள் உருவாகலாம். 

ஹாங்காங்!
இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் ஹாங்காங்கின் நிலை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங் ஆசியக் கோப்பையில் இடம்பெறுகிறது. ஆசியக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் மலேசியாவிடம் தோல்வியடைந்த ஹாங்காங் அடுத்தடுத்த போட்டிகளில் நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட் அணிகளை வீழ்த்தி, ஆசியக் கோப்பையில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 
அன்ஷுமன் ரத்தான் ஹாங்காங் அணியின் சூப்பர் ஸ்டார். கேப்டனான இவர்தான் அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன். 20 வயதேயான அன்ஷுமன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். அதேபோல் பெளலிங்கில் எஷான் நவாஸ், எஷான் கான் என இரண்டு சிறந்த பெளலர்களைக் கொண்டுள்ளது ஹாங்காங். எஷான் நவாஸ் வேகப்பந்து வீச்சாளர். எஷான் கான் சுழற்பந்து வீச்சாளர். 

ஹாங்காங் அணியைப் பொறுத்தவரை இளம் வீரர்கள் கொண்ட அணி என்பதுதான் அதன் பலம். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்குச் சவால்விடக்கூடிய அணி இது இல்லை. 

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு நாள்களுக்குள் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான். ஆனால், அது டெஸ்ட். ஒருநாள் போட்டிகளில் சவால்விடக்கூடிய அணியே ஆப்கானிஸ்தான். 2018 ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கிய ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான் என இரண்டு உலகத்தர ஸ்பின்னர்களைக் கொண்ட அணியாக முன் நிற்கிறது ஆப்கானிஸ்தான். இந்த இரண்டு ஸ்பின்னர்களும், இந்திய ஸ்பின்னர்களுக்கே சவால்விடக்கூடியவர்கள். அதேபோல் வேகப்பந்து வீச்சிலும் சிறந்த பெளலர்களைக் கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான். அஸ்கர் அஃப்கான் தலைமையிலான அணியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். ஜாவேத் அஹமதிதான் அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன். கிட்டத்தட்ட 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. 

இலங்கை!

இலங்கை

முதன்முறையாக பெரிய ஸ்டார் ப்ளேயர்கள் யாரும் இல்லாத அணியுடன் ஆசியக் கோப்பையில் களமிறங்கியிருக்கிறது இலங்கை. ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான அணியில் தினேஷ் சந்திமால், தனுஷ்கா குணதிலாக உள்ளிட்ட ஸ்டார் ப்ளேயர்கள் இல்லை. அதேபோல் டாப் கிளாஸ் ஸ்பின்னரான அகிலா தனஞ்செயாவும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்பது இலங்கைக்குப் பெரிய பின்னடைவு. முதல் போட்டியே வங்கதேசத்துடன்தான் என்பதும் அவர்களுக்கு மிகப்பெரிய சோதனையே. உபுல் தரங்கா, குஸால் பெரரா, குஸால் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், லசித் மலிங்கா, திஸாரா பெரரா, லக்மல் ஆகியோர் பெளலிங்கிலும் அசத்தினால் மட்டுமே இலங்கை மற்ற அணிகளுக்குச் சவால் விடும்.

வங்கதேசம்!

கோலி வங்கதேசம்

ஆசியக் கோப்பையில் மிகவும் ஆக்ரோஷமான அணி வங்கதேசம்தான். ஃபார்மில் இருக்கும் பல பேட்ஸ்மேன்களையும், பெளலர்களையும் அணியில் கொண்டிருக்கிறது வங்கதேசம். தமிம் இக்பால்தான் 2018-ம் ஆண்டில் வங்கதேசத்தின் ஸ்டார் பேட்ஸ்மேன். இதுவரை 539 ரன்கள் அடித்திருக்கிறார். ஆவரேஜ் கிட்டத்தட்ட ஒரு போட்டிக்கு 90 ரன்கள். லிட்டன் தாஸ், மஷரஃபி முர்தஸா, ஷகிப் அல் ஹசன், மஹமதுல்லா, முஷ்ஃபிகர் ரஹிம் என பேட்டிங்கில் செம ஸ்டராங்கான அணியாக இருக்கிறது வங்கதேசம். அதேபோல் வேகப்பந்து வீச்சில் முஸ்தஃபைஸுர் ரஹ்மானும், சுழற்பந்து வீச்சில் மெஹிதி ஹஸனும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என டாப் அணிகளுக்கே சவால்விடும் பேட்டிங், பெளலிங் லைன்-அப்புடன் இருக்கிறது வங்கதேசம். கடந்த மார்ச் மாதம் தினேஷ் கார்த்திக்கின் திடீர் அதிரடியால்தான் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. அதனால் இந்த முறை வங்கதேசத்தை எந்த அணியும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்துவிடமுடியாது.

பாகிஸ்தான்!

கோலி பாகிஸ்தான்

சீனியர்ஸ் ப்ளஸ் ஜூனியர்ஸ் எனச் சரியான மிக்ஸிங்கில் ஆசியக் கோப்பைக்கு வந்திருக்கிறது பாகிஸ்தான். சர்ஃப்ரஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணிதான் 2017 சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் இந்திய அணியைத் தோற்கடித்தது. சமீபத்தில் இரட்டை சதம் அடித்தவரும், 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து வெற்றிபெற்றுத்தந்தவருமான ஃபகர் ஸமான்தான் பாகிஸ்தானின் ஸ்டார் பேட்ஸ்மேன். இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் இந்த 28 வயது பேட்ஸ்மேனின் ஆவரேஜ் 76 ரன்கள். இதுவரை மூன்று சதங்களும், 6 அரை சதங்களும் அடித்திருக்கிறார். அதனால் ஃபகர் ஸமான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். பாகிஸ்தானின் இளம் வீரர் இமாம் உல் ஹக்-கும் மிக முக்கியமானவர். 22 வயதான இமாம் உல் ஹக்கின் பேட்டிங் ஆவரேஜும் 68 ரன்களுக்கு மேல். பாபர் அஸாம், ஆசிஃப் அலி ஆகியோரும் கவனிக்கத்தக்க பேட்ஸ்மேன்கள்.

சூப்பர் சீனியர் ஷோயப் மாலிக்கும் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே பாகிஸ்தானுக்கு பலமாக இருப்பார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலகக்கோப்பையின் பெளலிங் சென்சேஷன் ஷாஹின் அஃப்ரிடி. 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் எடுத்தார் ஷாஹின். ஆசியக் கோப்பையிலும் கவனிக்கத்தக்க பெளலராக இருப்பார் ஷாஹின். அவருக்கு பக்கபலமாக ஹஸன் அலி, ஜுனைத் கான், மொகமது ஆமிர் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார்கள்.
பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே மிகவும் ஸ்ட்ராங்கான அணியாக இருப்பதுதான் பாகிஸ்தானின் பலம். இந்தியாவை அச்சுறுத்தும் அணியாக பாகிஸ்தான் இருக்கும். 

இந்தியா!
கோலி இல்லாத இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாதான் கேப்டன். கோலி இல்லை என்றாலும் தோனி அணிக்குள் இருப்பது ஷர்மாவுக்குப் பெரிய பலம். துபாய், அபுதாபி நகரங்களில் இந்திய அணி பெரிதாக விளையாடியதில்லை என்பது மட்டுமே பலவீனம். மற்றபடி பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே ஸ்ட்ராங்கான அணியாக இருக்கிறது இந்தியா.

ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா என்பதுதான் இந்தியாவின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக இருக்கும். கோலி இல்லை என்பதால் நம்பர் 3 கே.எல் ராகுலுக்குத்தான். அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ் என்பதுதான் இந்தியாவின் மிடில் ஆர்டர் வரிசையாக இருக்கும். இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமதுக்கு ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பாக்கலாம். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் என இரண்டு ஸ்ட்ரைக் பெளலர்களும் ஃபுல் ஃபிட்னஸோடு இருக்கிறார்கள். ஸ்பின்னைப் பொறுத்தவரை யுவேந்திர சாஹால், குல்தீப் யாதவ் இருவரும்தான் ரோஹித் தலமையிலான அணியில் இடம்பிடிப்பார்கல் என எதிர்பார்க்கலாம்!

ஆசியக் கோப்பையின் ஹலைட்டே இந்தியா- பாகிஸ்தான் மோதல்தான். இந்த முறை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரண்டு அணிகளும் மோத வாய்ப்புகள் இருப்பதால் வெடி வெடிக்கத் தயாராவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்