வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (18/09/2018)

கடைசி தொடர்பு:07:47 (18/09/2018)

`ஆப்கான் சுழலில் சிக்கிய இலங்கை!’ - ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிப் பெற்றது.

கிரிக்கெட்

14-வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றுப் போட்டிகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 57 ரன்கள் எடுத்தது. ஷேசாத் 34 ரன்கள், ஜனத் 45 ரன்கள் எடுத்திருந்தபோது தனஞ்செயன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய ரஹ்மத் ஷா அரைசதத்தை கடந்தார்.  அணியின் ஸ்கோர் 190 ரன்களை தொட்டபோது திசாரா பெராரா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ரஹ்மத் ஷா வெளியேறினார். அவர் 90 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 249 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. இலங்கை தரப்பில் திசாரா பெராரா 5 விக்கெட்டுகளைப் கைப்பற்றினார். இலங்கை அணியின் வெற்றிக்கு 250 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கிரிக்கெட்இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலே குசல் மெண்டீஸ் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார். ஆப்கான் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் இலங்கை வீரர்கள் ரன் எடுக்கத் திணறினர். குறிப்பாக ஆப்கான் வீரர்களின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. ஐ.பி.எல் தொடரில் கலக்கிய ரஷித் கான் இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இலங்கை அணியில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 36 ரன்னும், திசாரா பெராரா 28 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்ததால் இலங்கை அணி ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடைபெறும் லீக் சுற்று ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கத்துக்குட்டியான ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.