வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (18/09/2018)

கடைசி தொடர்பு:13:00 (18/09/2018)

`இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது!’ - விராட் கோலி ஆப்சென்ஸ் குறித்து பாக். கேப்டன் கருத்து

விராட் கோலி இல்லாத நிலையிலும் இந்திய அணி வலுவான அணிதான் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலி

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி இடம் பெறவில்லை. தொடர் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம்காண்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. துபாயில் இன்று இந்தப் போட்டி நடைபெறுகிறது. அதேபோல், நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்திய அணியுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, ``இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்தான். இருப்பினும், அவர் இல்லாத நிலையிலும் இந்திய அணி வலுவான அணியாகத்தான் இருக்கிறது. சிறப்பான பங்களிப்பை வழங்கக் கூடிய வீரர்கள் பலர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அதனால், விராட் கோலி இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக இருப்பதால், போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும்’’ என்றார்.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இருப்பதால், பாகிஸ்தான் அணி வீரர்கள் மனரீதியாக வலிமையாக இருக்கிறார்கள் என்ற வாதத்தை ஏற்க மறுத்த சர்ப்ராஸ் அகமது, ``சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முடிந்து ஓராண்டு ஆகி விட்டது. அந்த வெற்றியை மனதில்வைத்து நாங்கள் களமிறங்க மாட்டோம். அப்போது இருந்த சூழல் வேறு; தற்போதைய சூழல் வேறு. அது வரலாறு. எனவே, மைதானத்துக்குள் புதிய திட்டத்துடன் நாங்கள் களமிறங்குவோம்’’ என்றார்.