ஜெயசூர்யா, டிசில்வா, முரளிதரன்... இந்தியாவை ஓட ஓட விரட்டிய இலங்கையா இது?! | Is This the Sri lanka Which Defeated India Continuously in the 90's...

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (18/09/2018)

கடைசி தொடர்பு:17:14 (18/09/2018)

ஜெயசூர்யா, டிசில்வா, முரளிதரன்... இந்தியாவை ஓட ஓட விரட்டிய இலங்கையா இது?!

இலங்கையை வீழ்த்தி ஒரு கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பிடித்தது. சச்சின், கங்குலி, டிராவிட், அசாருதின், ஶ்ரீநாத், கும்ப்ளே என ஜாம்பவான்கள் இருக்கும்போதே இந்தியாவைப் புரட்டியெடுத்ததுதான் இலங்கையின் வரலாறு.

ஜெயசூர்யா, டிசில்வா, முரளிதரன்... இந்தியாவை ஓட ஓட விரட்டிய இலங்கையா இது?!

1996... கொல்கத்தாவில் நடந்த அந்த உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அன்று அழவைத்தது ஒரு குட்டித் தீவின் கிரிக்கெட் அணி. இலங்கையின் எழுச்சி கிரிக்கெட்டில்  அந்த நாளிலிருந்துதான் ஆரம்பித்தது. ஜெயசூர்யா என்னும் ஸ்டார் வானத்துக்கு வந்தது!

அந்த நாள் மார்ச் 13,1996... கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கையும் இந்தியாவும் அரை இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் முகமது அசாருதின் இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்தார். எல்லாம் நல்லபடியாகத்தான் ஆரம்பித்தது. ஜவகல் ஶ்ரீநாத் வீசிய முதல் ஓவரிலேயே ஜெயசூர்யா, கலுவித்தரானா என இருவருமே அவுட். 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இலங்கை. ஆனால் அதன்பிறகு வந்தார்கள் அரவிந்த டி சில்வாவும், மஹானமாவும். இருவரும் மாறி மாறி ரன்கள் அடிக்க, இலங்கை 50 ஓவர்களில் 251 ரன்கள் அடித்தது.

ஜெயசூர்யா, முரளிதரன், டிசில்வா

இதுவும் அடிக்கக்கூடிய டார்கெட்தான் என இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தார் சச்சின் டெண்டுல்கர். 88 பந்துகளில்  65 ரன்கள் அடித்த சச்சின், ஜெயசூர்யாவின் பந்தை அடிக்க கொஞ்சம் கிரீஸைவிட்டு காலை வெளியே எடிக்க மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்வார் கலுவித்தரானா. அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது. சச்சின் அவுட் ஆகும்போது இந்தியாவின் ஸ்கோர் 98 ரன்கள். ஆனால், அடுத்துவந்த கேப்டன் அசாருதின் டக் அவுட். ஶ்ரீநாத் ஆறு ரன்களில் அவுட். அஜய் ஜடேஜா டக் அவுட். மோங்கியா 1 ரன், ஆஷிஷ் கபூர் டக் அவுட் என அடுத்தடுத்து வந்தவர்கள் சிங்கிள் டிஜிட்டில் காலியாக ஸ்டேடியமே கலவர பூமியானது. மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட, சேர்கள் கொளுத்தப்பட, ஆட்டம் நிறுத்தப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் போவார். அந்த நாள்தான் இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பம். 1996 உலகக்கோப்பையை வென்றது இலங்கை. அதன்பிறகு இந்தியாவை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கதற கதற அடித்தது இலங்கை.

இந்தியாவுக்கு இலங்கை அணியை வெல்வதே பெரும் சாதனையாகிப்போனது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, மஹானமா, அட்டப்பட்டு, அர்ஜுனா ரணதுங்கா, கலுவித்தரானா, திலகரத்னே, உபுள் சந்தனா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் என்கிற இந்தப் பெயர்களே இந்தியாவை பயமுறித்தின. உலகக்கோப்பை முடிந்ததும் சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தியிருக்கும் இந்தியா. உலகக்கோப்பை தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துக்கொண்டது என்று எல்லோரும் மகிழ்ந்தார்கள். ஆனால், அடுத்து அடுத்து இந்தியாவுக்குப் பல அவமானகரமான தோல்விகளைப் பரிசாகக் கொடுத்தது இலங்கை. 

ஜெயசூர்யா

வெளுத்த ஜெயசூர்யா!

கொழும்புவில் 1996, ஆகஸ்ட்டில் சிங்கர் வேர்ல்டு சீரிஸ் போட்டிகள் நடைபெற்றன. மீண்டும் இந்தியா வெர்ஸஸ் இலங்கை யுத்தம். சச்சின் டெண்டுல்கர்தான் இந்தியாவின் கேப்டன். அணியின் தலைவனாக சச்சின் தனிஒருவராக நின்று களத்தில் போராடுவார். சச்சின் டெண்டுல்கர் 110 ரன்கள் அடிக்க, முகமது அசாருதின் 58 ரன்கள் அடிக்க இந்தியா, 50 ஓவர்களில் 226 ரன்கள் அடிக்கும்.  அன்றைய மேட்ச்சில் கங்குலி, டிராவிட் என வீரர்கள் இருந்தும் அசாருதின் மிகப்பொறுமையாக 99 பந்துகளில் 58 ரன்களை அடித்திருப்பார். ஆனால் இந்தியாவின் இந்த 226 என்கிற டார்க்கெட்டை செம அசால்ட்டாக அடிக்கும் இலங்கை. ஜெயசூர்யா 8 பவுண்டரி 3 சிக்ஸர் என 120 ரன்கள் அடிப்பார். கலுவித்தரானா 53 ரன்கள், அரவிந்த டி சில்வா 49 ரன்கள் என வெறும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து டார்கெட்டை முடித்திருக்கும் இலங்கை. ஆட்டம் முடிந்ததும் ப்ரசென்டேஷனில் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர். இந்த சீரிஸில் ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையையும் கைப்பற்றியிருக்கும் இலங்கை.

ஜெயசூர்யா

இண்டிபெண்டன்ஸ் கப்பில் தனி ஒருவன்!

1997 இந்தியாவின் 50 ஆண்டுகால சுதந்திரதின கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக இண்டிபெண்டன்ஸ் கோப்பை இந்தியாவில் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மே மாதம் இந்தியாவும், இலங்கையும் மோதிக்கொண்டன. இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கங்குலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆக, சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களில் அவுட் ஆகியிருப்பார். டிராவிட் 61 ரன்கள், அஜய் ஜடேஜா 72 ரன்கள், ராபின் சிங் 51 ரன்கள் என தட்டுத்தடுமாறி 50 ஓவர்களில் 225 ரன்கள் அடித்திருக்கும் இந்தியா.

இந்தப் போட்டியிலும் எதிரி ஜெயசூர்யாதான். ஈவு இரக்கமின்றி இந்திய பெளலர்களை விரட்டி விரட்டி வெளுத்திருப்பார் ஜெயசூர்யா. 40 ஓவர்களில் இலங்கை டார்கெட்டை முடித்திருக்கும். இறுதிவரை இந்திய பெளலர்களால் ஜெயசூர்யாவை அவுட் ஆக்கமுடியவில்லை. 120 பந்துகளில் 151 ரன்கள் அடித்திருப்பார் ஜெயசூர்யா. தனி ஒருவனாக மும்பையில் இந்திய அணியை துவம்சம் செய்த ஜெயசூர்யாவின் அந்த இன்னிங்ஸை கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே மறக்க முடியாது.

இந்த சீரிஸில்தான் சென்னையில் சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் என உலக சாதனை படைத்திருப்பார்.

1997 ஆசிய கோப்பை!

மே மாத தோல்வி மறக்கும்முன்பாகவே ஜூலையில் வந்தது ஆசிய கோப்பை போட்டிகள். அப்போதெல்லாம் இந்தியா, இலங்கைக்கு எதிராக 230 ரன்களையே தாண்டியதில்லை. இந்தப் போட்டியும் அப்படித்தான். கேப்டன் சச்சின் 21 ரன்களில் அவுட் ஆவார். மிடில் ஆர்டரில் டிராவிட் 102 பந்துகளில் 69 ரன்கள் அடிக்க, அசாருதின் 103 பந்துகளில் 81 ரன்கள் அடிக்க,  இலங்கைக்கு 228 ரன்கள் என டார்கெட்டை ஃபிக்ஸ் செய்தது இந்தியா. இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே ஜெயசூர்யா டக் அவுட். ஆனால், ரணதுங்கா வடிவில் வந்தது சோதனை. பொறுக்க பொறுக்க இந்திய பெளலர்களை வைத்து செய்திருப்பார் ரணதுங்கா. 152 பந்துகளில் 131 ரன்கள் நாட் அவுட். 45வது ஓவரில் டார்கெட்டை முடித்திருக்கும் இலங்கை.

ஆனால், ஆசியக் கோப்பையில் சோதனை ஒரு போட்டியோடு முடியவில்லை. இறுதிப்போட்டியில் மீண்டும் கொழும்புவில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்த மேட்ச்சில் சச்சின் டெண்டுல்கர் 2 டவுன் பேட்ஸ்மேனாக இறங்குவார். 67 பந்துகளில் 53 ரன்கள் அடித்து முரளிதரன் பந்தில் அவுட் ஆவார் சச்சின். இந்தப் போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் ஸ்டார் அசாருதின்தான். 102 பந்துகளில் 81 ரன்கள் அசாருதின் அடிக்க, இந்தியா கொஞ்சம் அதிகமாக 240 ரன்கள் என டார்கெட்டை ஃபிக்ஸ் செய்யும். ஜெயசூர்யாவும் அட்டப்பட்டுவும்தான் ஓப்பனிங் ஜோடி.  2 சிக்ஸர் உட்பட 52 பந்துகளில் ஜெயசூர்யா 63 ரன்கள் அடிக்க, இன்னொருபக்கம் அட்டப்பட்டுவும் வெளுப்பார். முதல் விக்கெட்டாக ஜெயசூர்யாவை அவுட் ஆக்குவதற்குள்ளாகவே இலங்கை 137 ரன்கள் அடித்துவிடும். அட்டப்பட்டுவோடு ரணதுங்கா ஜோடி போடுவார். அட்டப்பட்டு 84, ரணதுங்கா 62 ரன்கள் அடிக்க வெறும் 37 ஓவர்களிலேயே இந்தியாவின் 240 ரன்கள் டார்கெட்டை அடித்து நொறுக்கிவிடும் இலங்கை. 

பெளலர்களை கதறவிட்ட டெஸ்ட்

1997 ஆகஸ்ட்டில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் போனது இந்தியா. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட். நவ்ஜோத் சிங் சித்து சதம், சச்சின் டெண்டுல்கர் 143 ரன்கள், அசாருதின் 126 ரன்கள் என முதல் இன்னிங்ஸில் இந்தியா 537 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்யும். ஆனால், இலங்கை, இந்தியாவை டிக்ளேர் செய்யாமல் கதறவிடும். சனத் ஜெயசூர்யா 340 ரன்கள் அடிப்பார். 578 பந்துகளில் 36 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என இந்திய பெளலர்களை அசால்ட்டாக டீல் செய்திருப்பார் ஜெயசூர்யா. ஆனால், அன்று இந்தியாவின் பெளலர்களை சோதித்தது ஜெயசூர்யா மட்டுமல்ல. ரோஷன் மஹானமா 225 ரன்கள்... இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெயசூர்யாவும், மஹானமாவும் சேர்ந்து 576 ரன்கள் அடித்திருப்பார்கள். அடுத்து அரவிந்த டி சில்வா 126 ரன்கள், ரணதுங்கா 86, ஜெயவர்தனே 66 ரன்கள் எனத் தொடர்ந்து மூன்று நாள்கள் பேட்டிங் செய்து 952 ரன்கள் அடிக்கும் இலங்கை. இந்த இன்னிங்ஸில் மட்டும் ராஜேஷ் செளஹான், அணில் கும்ப்ளே, அபே குருவில்லா என மூன்று இந்திய பெளலர்களும் ஆளுக்கு தலா 70 ஓவர்களுக்கும் மேல் பந்து வீசியிருப்பார்கள். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வெற்றி!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் போட்டியில் இலங்கையை இந்தியா இரண்டு முறை வீழ்த்தி கோப்பையை வென்றதுதான் அப்போது மிகப்பெரிய சாதனையாக கொண்டாடப்பட்டது. 1998 ஜூன் - ஜூலையில் சிங்கர் அகாய் நிதாஸ் கோப்பை போட்டி நடைபெற்றது. லீக் போட்டியில் இலங்கையின் டார்கெட்டான 243 ரன்களை இந்தியா, 44 ஓவர்களில் சேஸ் செய்து முடிக்கும். கங்குலி 80 ரன்கள், சச்சின் 65 ரன்கள், அசாருதின் 55 ரன்கள் என மூன்று பேட்ஸ்மேன்களுமே அசத்த இந்த வெற்றி சாத்தியமாகும்.

இறுதிப்போட்டியில்தான் பெரிய ட்விஸ்ட். இந்தியா முதல்முறையாக  இலங்கைக்கு எதிராக 300 ரன்களைத்தாண்டும். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கங்குலியும், சச்சினும் இலங்கை பெளலர்களை சிதறவிட்ட போட்டி அது. கங்குலி 109 ரன்கள் அடிக்க, சச்சின் டெண்டுல்கர் 128 ரன்கள் அடிப்பார். முதல் விக்கெட் பார்டனர்ஷிப்பே 252 ரன்கள். இந்தியா 50 ஓவர்களில் 307 ரன்கள் அடிக்கும். 

ஆனால், இந்தியாவை முதலில் ஆட விட்டு சேஸ் செய்வதுதான் இலங்கையின் வாடிக்கை என்பதால் 300 ரன்களுக்கு மேல் அடித்தும் இந்தியாவின் வெற்றிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதுபோல போனது மேட்ச். அரவிந்த டி சில்வா 105 ரன்கள் அடிக்க, மஹானமா 44 ரன்கள் அடித்திருப்பார். மஹானமா ரன் அவுட் ஆனப்பிறகுதான் இந்தியாவின் வெற்றி ஓரளவுக்கு உறுதியாகியிருக்கும். 50-வது ஓவரில் 301 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் இலங்கை. இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

ஜெயசூர்யா, டிசில்வா, முரளிதரன்

இலங்கையை வீழ்த்தி இந்தியாவால் ஒரு கோப்பையை வெல்ல கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பிடித்தது. சச்சின், கங்குலி, டிராவிட், அசாருதின், ஶ்ரீநாத், கும்ப்ளே என ஜாம்பவான்கள் இருக்கும்போதே இந்தியாவைப் புரட்டியெடுத்ததுதான் இலங்கையின் வரலாறு.

ஆனால், இன்றோ வங்கதேசம், ஆப்கானிஸ்தானிடம் எல்லாம் ஆல் அவுட் ஆகி மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கிறது ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை. இந்தியாவுக்குக் கொஞ்சம் கூட இரக்கம் காட்டக்கூடாது என்று முன்னர் சொன்னது, இன்று இலங்கைக்கு யாரும் இரக்கம் காட்டக்கூடாதா என்கிற நிலைமையில் வந்து நின்றிருக்கிறது. 

எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே இலங்கையன்ஸ்... பரிதாபங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்