வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (19/09/2018)

கடைசி தொடர்பு:14:29 (19/09/2018)

பாகிஸ்தானை வெல்லக்கூடிய அணியா ரோஹித் ஷர்மாவின் அணி... யாருக்கு என்ன பலம்?! #IndVsPak

பாகிஸ்தான் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே இந்தியாவைவிட வலுவான அணி என்பதுதான் உண்மை.

பாகிஸ்தானை வெல்லக்கூடிய அணியா ரோஹித் ஷர்மாவின் அணி... யாருக்கு என்ன பலம்?! #IndVsPak

தட்டுத்தடுமாறி தப்பிப் பிழைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஹாங்காங்கிற்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். அதேசமயம் இந்திய அணிக்கு எந்த இடத்தில் எல்லாம் சரி செய்ய வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் ஆட்டமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் - பாகிஸ்தானும் சந்திக்கின்றன. 2017 சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி. இந்தமுறை ரோஹித் தலைமையிலான இந்தியாவின் டர்ன்?

ரோஹித்

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் என்ன?
ஹாங்காங்கிற்கு எதிராக டெஸ்ட்டிங் லெவனைத்தான் களமிறக்கியது இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் அப்படியிருக்காது. ரோஹித் ஷர்மா இந்த மேட்ச்சுக்கு பெர்ஃபெக்ட் லெவனைத் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கலாம். தவான் - ரோஹித் என்பதுதான் ஓப்பனிங் கூட்டணி. ஹாங்காங்கிற்கு எதிராக 1 டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அம்பதி ராயுடு பாகிஸ்தானுக்கு எதிராக செகண்ட் டவுன் பேட்ஸ்மேனாகத்தான் வருவார். 1 டவுன் இடம் கே.எல். ராகுலுக்குக் காத்திருக்கிறது. மூன்றாவது டவுன் பேட்ஸ்மேனாக எம்.எஸ் தோனி. ஆல் ரவுண்டர் ஸ்பாட்டில் ஹர்திக் பாண்டியா வருவார். கேதர் ஜாதவா - தினேஷ் கார்த்திக்கா என்பதுதான் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும். ஆனால், ரோஹித் ஷர்மா கேதர் ஜாதவையே களம் இறக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் கேதர் ஜாதவை பெளலிங்கிற்கும் பயன்படுத்தலாம்...

ரோஹித்

பெளலிங்கைப்  பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா இருவரும் பேஸ் பெளலர்களாக இருப்பார்கள். லெக் ஸ்பின்னராக சாஹலும், ஆஃப் ஸ்பின்னராக குல்தீப் யாதவும் இருப்பார்கள்.  

பவர்ஃபுல் பாகிஸ்தான்!
கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய பெளலர்களை வெளுத்தெடுத்தார்கள். அஸார் அலி 59 ரன்கள் அடிக்க, ஃபகர் ஸமான் சதம் அடித்தார். அதேபோல் பாபர் அஸாம், மொகமது ஹஃபிஸூம் ரன்கள் குவித்தார்கள். இந்த டாப் ஆர்டர் லைன் அப் அப்படியே இந்த ஆண்டு இல்லை. ஆனால், அதைவிட அவர்கள் பேட்டிங் லைன் அப் பவர்ஃபுல்லாக இருக்கிறது. அஸார் அலிக்கு பதிலாக இளம் வீரர் இமாம் உல் ஹக், ஃபகர் ஸமானுடன் களம் இறங்குவார். பாபர் அஸாம் 1 டவுன் பேட்ஸ்மேனாகவும், செகண்ட் டவுனில் சூப்பர் சீனியர் ஷோயப் மாலிக்கும் களம் இறங்குவார்கள். கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃபரஸ் அஹமது 3 டவுன் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார். இவரைத் தொடர்ந்து ஆசிஃப் அலி களமிறங்குவார். 

ரோஹித் பாகிஸ்தான்

பெளலிங்கைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக ஜுனைத் கானை பாகிஸ்தான் களமிறக்கும் என எதிர்பார்க்கலாம். சாம்பியன்ஸ் டிராஃபியில் மிகச்சிறப்பாக பந்து வீசியர் ஜுனைத். ஹாங்காங்கிற்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹஸன் அலி இருவரும் அணியில் இடம்பிடிப்பது நிச்சயம். ஆல் ரவுண்டர் ஸ்பாட்டில் ஃபஹீம் அஷ்ரஃப் இருப்பார். இவரும் பெளலிங் ஆல்ரவுண்டர்தான். ஸ்பின்னைப் பொறுத்தவரை லெக் ஸ்பின்னர் ஷதாப் கானும், ஷோயப் மாலிக்கும் இருப்பார்கள். இரண்டாவது ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக மொகமது நவாஸையும் பாகிஸ்தான் தன் அணிக்குள் சேர்க்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பிட்ச்!
துபாய் பிட்ச்சை நியூட்ரல் பிட்ச் என்றே சொல்லலாம். ஸ்பின்னுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பிட்ச் இது. துபாயில் விளையாடுவதற்கான பெரிய சவாலே புழுக்கத்தைச் சமாளித்து ஆடக்கூடிய அளவுக்கு ஃபிட்னஸ் வேண்டும் என்பதே. அதனால் யார் டாஸ் வென்றாலும் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.

யாருக்கு பலம்?
பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே இந்தியாவைவிட பாகிஸ்தான் வலுவான அணி என்பதுதான் உண்மை. ஹாங்காங்கிற்கு எதிராக புவனேஷ்குமாரின் பெளலிங்கே எடுபடவில்லை என்பது இந்தியாவின் மிகப்பெரிய கவலை. ஃபகர் ஸமான் ஸ்பின் பெளலிங்கை மிகச்சிறப்பாக சமாளித்து ஆடக்கூடியவர். இவருக்கு முதன்முறையாக சாஹலும், குல்தீப்பும் பந்து வீச இருக்கிறார்கள். இந்தியாவின் பேட்டிங், பெளலிங் இரண்டுமே 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லையென்றால் பாகிஸ்தானின் கையே ஓங்கியிருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்