வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/09/2018)

கடைசி தொடர்பு:16:20 (19/09/2018)

`இந்திய அணிக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை?’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கேள்வி

`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடைபெறுகின்றன. அவர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது’’ எனப் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கேள்வி எழுப்பியுள்ளார். 

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது

கடந்த 15-ம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடத்தப்படுகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இலங்கை அணி தொடரைவிட்டு வெளியேறிவிட்டது. வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இன்று பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு ஒரு போட்டி துபாய் மைதானத்திலும் மற்றொரு போட்டி அபுதாபியிலும் நடத்தப்படுகிறது. ஆனால், இந்திய அணி விளையாடும் போட்டி இரண்டு லீக் போட்டிகளுமே துபாயில் நடத்தப்படுகிறது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, ``இரண்டு போட்டிகளுமே துபாயில் விளையாடும்படி இந்தியாவுக்கு அட்டவணை போடப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே ஒன்றரை மணி நேரம் வெயிலில் பயணிப்பதில் பிரச்னை இருக்கிறது. 

ஒன்றரை மணி நேரம் வெயிலில் பயணித்து மறுநாள் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது கடினமான விஷயம்தான். ஆனால் மற்ற அணிகள் இரண்டு நகரங்களிலும் சென்று விளையாடுகின்றன. என்னைப் பொறுத்தவரை விதி என்பது இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து அணிகளுக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அட்டவணையில் என்ன செய்திருக்கிறது எனத் தெரியவில்லை. இந்திய அணிக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது எனத் தெரிவியவில்லை" என்றார். அப்போது `இந்திய அணி தொடர்ந்து மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் விளையாடிய பின் அடுத்தடுத்து இங்கும் போட்டிகளில் விளையாடுகிறதே' எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், ``அடுத்தடுத்து விளையாடினாலும், ஆசியக் கோப்பையில் மற்ற அணிகள் முதல் போட்டிகளை முடித்த பின்புதானே இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது" எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க