வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (19/09/2018)

கடைசி தொடர்பு:15:58 (19/09/2018)

கிரிக்கெட் உலகில் வேற்றுமையைக் கடந்த அன்பு... சுதீர் பஷீர் நட்பு!  

விளையாட்டு,  பகைமையை அகற்றும் என்பார்கள். இந்த வாசகம் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக, கிரிக்கெட் உலகில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது, தற்போது, துபாயில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது,. இந்திய அணி மற்றும் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகருமான சுதீர் கௌதம், இந்தியா எங்கே விளையாடினாலும் போட்டியைக் காணச் செல்வார். அதேபோல, பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகர் பஷீர். இவரை கிரிக்கெட் உலகில், மாமா என்று அழைப்பார்கள்.  சுதீர் போல இவரும் பாகிஸ்தான் அணி எங்கே சென்று ஆடினாலும் போட்டியைக் காணச் செல்வார். 

கிரிகெட் ரசிகர்கள் சுதீர், பஷீர்

மைதானத்தில் சுதிரும் பஷீரும் அருகருகே நின்று இரு நாட்டு தேசியக் கொடிகளையும் கையில் வைத்துக்கொண்டு போட்டியை ரசிப்பது வழக்கம். ஆசியக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பஷீர் , 'சுதீரைத் தொடர்புகொண்டு போட்டியைக் காண துபாய் வருகிறீர்களா ' என்று கேட்டுள்ளார். சுதீரோ, தன்னிடம் பணம் இல்லை. அதனால், வரவில்லை' என்று பதிலளித்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த பஷீர்... 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். துபாய் சென்றுவரும் விமானக்கட்டணம் முதல் தங்கும் செலவு, உணவு அத்தனையையும் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறினார். சொன்னது போல சுதீருக்கு விமான  டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்தார்.  சுதீரும் போட்டியைக் காண  தற்போது துபாய் சென்றுள்ளார். துபாயில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இருவரும் சேர்ந்து காணப்போகிறார்கள். 

பஷீர் கூறுகையில், '' நானும் பெரும் பணக்காரர் கிடையாது. கடவுளின் தயவில் என் மனம் கடல்போல பரந்தது. சுதீருக்கு நான் உதவியதற்காக கடவுள் மகிழ்ச்சி அடைவார் ''என்கிறார்  பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டியைக் காண சுதீர் சென்றபோது, பஷீர் அவரை  வீட்டுக்கு அழைத்துச்சென்று விருந்தளித்து மகிழ்ந்ததும் உண்டு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க