வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (19/09/2018)

கடைசி தொடர்பு:20:29 (19/09/2018)

புவனேஷ்வர் குமார், கேதர் ஜாதவ் அசத்தல்! - பாகிஸ்தானை 162 ரன்களில் சுருட்டிய இந்தியா #IndvsPak

ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 162 ரன்களில் சுருட்டியது. 

கேதர் ஜாதவ்

Photo Credit: ICC

துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் மற்றும் கலீல் அஹமது ஆகியோருக்குப் பதிலாக ஹர்டிக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை இமாம் உல்ஹக் மற்றும் ஃபகர் ஜமன் ஆகியோர் தொடங்கினர். 
தொடக்க வீரர்கள் இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்த புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோத்த பாபர் ஆசம் - சோபய் மாலிக் ஜோடி அணியை மீட்கப் போராடியது. இந்த இணை 3 வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசம் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ் பந்துவீச்சில் மணீஷ் பாண்டேவின் அசத்தல் கேட்ச் அவரை பெவிலியனுக்கு அனுப்பியது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சோயப் மாலிக், 43 ரன்களில் அம்பாதி ராயுடுவின் அசத்தல் த்ரோவில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால், பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.