வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (20/09/2018)

கடைசி தொடர்பு:08:32 (20/09/2018)

`எனது எல்லைக்குள் இருக்கவே முயற்சி செய்கிறேன்' -வெற்றிக்குப் பின் கேதர் ஜாதவ் பேட்டி

நேற்று நடந்த ஆசியக் கோப்பை லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

கேதர் ஜாதவ்

photo credit:twitter/@icc

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்குப் பின் விளையாடியதாலும், கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியுற்றதாலும் இந்தப் போட்டி இந்திய அணிக்குச் சற்று நெருக்கடியாகவே இருந்தது. பாகிஸ்தானை எதிர்கொள்வதற்காகப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இடக்கை பௌலர்கள் கொண்டு இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். இதற்குப் பலனும் கிடைத்தது. இந்திய அணியின் நேற்றைய வெற்றிக்கு பௌலர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இந்திய பௌலர்கள் பாகிஸ்தானை ரன்கள் குவிக்கவிடாமல் பார்த்துக்கொண்டதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் எடுத்தனர். குறிப்பாக ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் அணிக்குப் பெரிதும் கைகொடுத்தார். 9 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

முக்கியமான நேரத்தில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டரை அடுத்தடுத்து வெளியேற்றி அந்த அணிக்கு கடும் நெருக்கடியை தந்தார் ஜாதவ். அதனால் பாகிஸ்தான் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து விரைவாகவே ஆட்டம் இழந்தது. கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார் ஜாதவ். அதன்பிறகு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்த அவர் மீண்டுவந்து இப்போது கலக்கியுள்ளார். தன் ஆட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் கேதர் ஜாதவ். அப்போது, ``இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒருவிதமான பரபரப்பு இருக்கும். இதில் வெற்றிபெற்றது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

கேதர் ஜாதவ்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னுடைய ஃபிட்னெஸ் தற்போது நன்றாக உள்ளதை உணர்கிறேன். கடந்த நான்கு மாதங்களாக ஃபிட்னெஸ் தொடர்பாக நிறைய கற்றுக்கொண்டேன். அது இப்போது எனக்குப் பெரிதும் கைகொடுப்பதுடன் என்னை வேறு மாதிரியான கிரிக்கெட்டராக மாற்றியுள்ளது. போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் நான் குறைந்த ஓவர்களே வீசினேன். நான் ஒரு பந்து வீச்சாளராக இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்தால் ஏற்கெனவே உள்ள மற்ற திறன்களில் சமரசம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அதனால் என் எல்லைக்குள் இருக்க முயற்சி செய்கிறேன். ரோஹித் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதை நாங்கள் விரும்புகிறோம்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க