வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (20/09/2018)

கடைசி தொடர்பு:19:50 (20/09/2018)

`ஷபாஸ்’ நதீம் சபாஷ்! - `லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் புதிய சாதனை!  #ShahbazNadeem

டொமஸ்டிக் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜார்க்கண்ட், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, சென்னையில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 28.3 ஓவர்களில் சுருண்டு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. காரணம், ஜார்க்கண்ட் பெளலர் ஷபாஸ் நதீம். #ShahbazNadeem

Shahbaz Nadeem

சென்னை ஆடுகளங்கள் ஸ்பின்னுக்குச் சாதகமானவை எனச் சொல்லித் தெரிவதில்லை. பத்து ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நதீம், ஹாட்ரிக் உள்பட 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை நிலைகுலையச் செய்தார். பின்னர், களமிறங்கிய ஜார்க்கண்ட் 14.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 76 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

பிஹாரின் போகரா பகுதியில் பிறந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான நதீம், ஒரு வாரத்துக்கு முன், ஆசியக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றிருந்தார். ஏனெனில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பிராக்டீஸ் மற்றும் வலைப்பயிற்சியின்போது சிலர் பந்துவீசுவர். அதில் நதீமும் இடம்பெற்றிருந்தார். விஜய் ஹசாரே தொடரை முன்னிட்டு, சமீபத்தில் நாடு திரும்பிய அவர், உள்ளூர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். நதீம் 10 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்ததே, `லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் புதிய சாதனை. இதற்கு முன், 1997-98-ல் டெல்லியைச் சேர்ந்த ராகுல் சங்வி, ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நதீம், தற்போது அதை முறியடித்துள்ளார்.

நதீம் 10-வது ஓவரை வீசவந்தபோது ராஜஸ்தான், விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதற்கு பின் அவர், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை ஒவ்வொருவராக பெவிலியன் அனுப்பி வைத்தார். தன் ஆறாவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் மகிபால் லாம்ரர், சேத்தன் பிஸ்ட் இருவர் விக்கெட்டை எடுத்தவர், தன் அடுத்த ஓவரின் முதல் பந்தில் தஜிந்தரை எல்பிடபுள்யு முறையில் அவுட்டாக்கி `ஹாட்ரிக்கை’ வசப்படுத்தினார். 

ஒரு கட்டத்தில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது, மற்றொரு  லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னரான 19 வயது அங்குல் ராய், கடைசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதுவும் நதீம் உதவியுடன்... 

``இன்னிங்ஸ் முடிந்தபிறகே இந்த உலக சாதனை விஷயத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். ஹாட்ரிக் எடுத்ததே எனக்கு அப்போது தெரியவில்லை. ஏனெனில் முந்தைய ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்திருந்தேன். அதற்குப் பின் அடுத்த ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துவிட்டேன். எட்டாவது விக்கெட்டை எடுத்தபோது, 10 விக்கெட்டுகளையும் நானே எடுத்துவிடலாம் என நினைத்தேன். நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதானே கிடைக்கும். இன்று எனக்கு எட்டு விக்கெட்தான் கிடைக்க வேண்டும் என எழுதியிருக்கிறது போல...’’ என போட்டி முடிந்த பின் சொன்னார் நதீம். 

பெரும் சாதனை நழுவிய ஏக்கம் ஏதும் அவரிடம் இல்லை. `அங்குல் என் சாதனைக்கு குறுக்கில் இருந்ததாக நான் கருதவில்லை. பத்து விக்கெட் எடுக்க வாய்ப்பு இருந்து, அது நழுவும்போது ஏமாற்றம் இருக்கத்தானே செய்யும். அதேநேரத்தில் அணி வெற்றி பெற்றது. அதுதான் முக்கியமான விஷயம். உண்மையில், அங்குல் கொஞ்சம் ஸ்லோவாக வீசிக்கொண்டிருந்தார். இதுபோன்ற பிட்ச்சில் கொஞ்சம் வேகமாக வீச வேண்டும் என அவரிடம் சொன்னேன். அதன்பிறகு பந்து நன்றாக சுழன்றது. விக்கெட்டும் கிடைத்தது’’ எனப் பெருமைப்பட்டார் நதீம்.