வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (22/09/2018)

கடைசி தொடர்பு:10:48 (22/09/2018)

‘ஜடேஜா சுழல், ரோஹித் அட்டாக்’ - வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  ‘சூப்பர் 4’ சுற்றில் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஜடேஜா 4 விக்கெட்டுகளைப் கைப்பற்றினார்.

ஜடேஜா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில், ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்தச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேசத்தின் இன்னிங்ஸை லிட்டன் தாஸ் மற்றும் நஸ்முல் ஹுசைன் தொடங்கினர். தொடக்க விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவிலே கைப்பற்றினர். 4-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரிலே பும்ரா பந்துவீச்சில் நஸ்முன் ஹுசைன் அவுட் ஆனார். ஜடேஜா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

ஜடேஜாஜடேஜா சுழலில் சிக்கி ஷாகிப் அல் ஹசான், முஷ்பிகுர் ரஹீம், முகமது மிதுன் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணியின் துல்லியமான தாக்குதலால் வங்கதேச வீரர்களால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. முடிவில் அந்த அணி 49.1 ஓவர்களுக்கு 173 ரன்கள் எடுத்து ஆல்- அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக  ரோஹித் ஷர்மா 83 ரன்களை குவித்தார்.