கடைசி ஓவர்களில் நெருக்கடி கொடுத்த இந்தியா! - 237 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட பாகிஸ்தான் #INDvPAK | India restricted pakistan 237 runs in Asia cup super four match

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (23/09/2018)

கடைசி தொடர்பு:20:31 (23/09/2018)

கடைசி ஓவர்களில் நெருக்கடி கொடுத்த இந்தியா! - 237 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட பாகிஸ்தான் #INDvPAK

இந்திய அணிக்கெதிரான ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 237  ரன்கள் எடுத்தது. 

சோயப் மாலிக்

Photo Credit: ICC

துபாய் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஹரீஸ் சொஹைல் மற்றும் உஸ்மான் கான் ஆகியோருக்குப் பதிலாக முகமது ஆமீர் மற்றும் சதாப் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். `பேட்டிங்கிற்குச் சாதகமான இந்த மைதானத்தில் முதல் பேட் செய்வது எளிதாக இருக்கும். இன்றைய போட்டியில் 250 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று நம்புகிறேன்’ என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறியிருந்தார். வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்திய அணி களம்கண்டது. 

பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை ஃபகர் ஜமன் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடியை சஹால் பிரித்தார். அவரது பந்துவீச்சில் இமாம் உல்ஹக்     எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஜமான், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த பாபர் ஆஸம் ரன் அவுட் ஆகி வெளியேற பாகிஸ்தான் அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4-வது விக்கெட்டுக்குக் கைகோத்த கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது - சோயப் மாலிக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டது. தொடக்கத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட இந்த ஜோடி, நேரம் செல்லச் செல்ல அதிரடி காட்டியது. 4வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். சர்ஃப்ராஸ் அகமது 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த சோயப் மாலிக், அரைசதம் கடந்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக அவர் பதிவு செய்யும் 15வது அரைசதம் இதுவாகும்.

இந்திய அணி

Photo Credit: ICC

அடுத்து களமிறங்கிய ஆசிப் அலி, அதிரடி காட்டினார். புவனேஷ்வர் குமார் வீசிய 42 ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட 22 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், பும்ரா வீசிய 44வது ஓவரில் சோயப் மாலிக் ஆட்டமிழந்தார். அவர் 90 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரிலேயே அதிரடிகாட்டிய ஆசிப் அலி, ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். இதனால், பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் மெதுவாகச் சரியத் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி 5 ஓவர்கள் சிறப்பாகப் பந்துவீசவே பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது ஹஸன் அலி 2 ரன்களுடனும், முகமது நவாஸ் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சஹால், குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.