வெளியிடப்பட்ட நேரம்: 00:26 (24/09/2018)

கடைசி தொடர்பு:08:51 (24/09/2018)

தவான், ரோஹித் ஷர்மா அதிரடி சதம் - 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்றில், இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

ரோஹித் சர்மா

Photo Credit: BCCI

துபாய் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே குவித்தது. 238 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுகளைச் சிதறடித்தனர்.

அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், 18-வது ஓவரில் 56 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். அடுத்ததாக, 22-வது ஓவரில் 66 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார் ரோஹித் சர்மா. தொடர்ந்து, இருவரும் அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், 95 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டியில் அவரது 15-வது சதத்தைப் பதிவுசெய்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய தவான், எதிர்பாராத விதமாக 114 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, அம்பதி ராயுடு களமிறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா, 106 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 19-வது சதத்தைப் பதிவுசெய்தார். இறுதியாக, இந்திய அணி 39.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ரோஹித் சர்மா 111 ரன்களுடனும் ராயுடு 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.