சச்சினுக்கு அடுத்த இடத்தில் தோனி! - நேற்றைய ஆட்டத்தில் புதிய சாதனை | dhoni overtook Rahul Dravid to become the second most

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (24/09/2018)

கடைசி தொடர்பு:10:10 (24/09/2018)

சச்சினுக்கு அடுத்த இடத்தில் தோனி! - நேற்றைய ஆட்டத்தில் புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடியதில், ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து, தோனி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், சச்சினுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் தோனி.

தோனி


ஐக்கிய அமீரகத்தில் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்றைய சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 50 ஓவர்களில் 7விக்கெட்டுகளை இழந்து 237ரன்களைக் குவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டுபேரும் சதம் அடித்து, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இந்தப் போட்டியில் விளையாடியதன்மூலம், தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்காக அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், சச்சின் 664 போட்டிகளில் விளையாடி முதலிடத்திலும், 504 போட்டிகளில் விளையாடி ராகுல் ட்ராவிட் 2-வது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில், நேற்றைய பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்மூலம், தோனி 505 போட்டிகளில் விளையாடி, ட்ராவிட்டின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த 505 போட்டிகளில், 331 போட்டிகளில் கேப்டனாகவும் டி20 உலகக்கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் மூன்று விதமான கோப்பைகளையும் பெற்று, வரலாற்றுச் சாதனையை தோனி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.