வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (24/09/2018)

கடைசி தொடர்பு:15:08 (24/09/2018)

பதக்கங்களுடன் சியர்ஸ் சொல்லும் 80 வயது தடகள வீராங்கனைகள்!

கோவை மாவட்டம் மாஸ்டர்ஸ் தடகளச் சங்கம் நடத்தும் 36வது தடகளப் போட்டி இன்று கோவை நேரு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு சங்கத்தின் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் ராதாமணி ஒருங்கிணைந்து நடத்திய இப்போட்டியில் 35 முதல் 90 வயதுக்குட்பட்டோர் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்ததையொட்டி, நானூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்றனர். 280 விளையாட்டு நிகழ்வுகள், வயதுக்கு ஏற்ப வகைப்படுத்தி காலை 6 முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக இன்று நடைபெற்றன.

தடகள வீராங்கனைகள்

400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை நிறைவாக முடித்து வந்த 82 வயது லீலாவதி, அவரிடம் கைக்குலுக்கி மகிழ்வைப் பகிர்ந்துகொள்ளும் 81 வயது வசந்தா சாமுவேல் என மைதானமே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. போட்டியைத் தொடர்ந்து, தடகளச் சங்கத்தின் தொழில்நுட்பத் தலைவர் சீனிவாசன் கூறுகையில் ``இப்போட்டியில் வெற்றிபெறுவோர் தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கும் அதைத் தொடர்ந்து குண்டூரில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கும் அனுப்பப்படுவர். வருடாவருடம் நிறைய போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர்" என்றார்.

கோவை விளையாட்டு சங்கத்தின் பெண்கள் பிரிவுத் தலைவர் சிவகாமி பேசுகையில் ``என்னுடைய பன்னிரண்டாவது வயதிலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கிறேன். மாவட்ட, மாநில, தேசிய, உலகளாவிய போட்டிகளில் கலந்துகொண்டதுண்டு. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்காகக் கலந்துகொண்டு தட்டெறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளேன்" எனப் பெருமைப்பட பகிர்ந்தார்.

மேலும், ``வெளிநாடுகளில் பெண்களுக்கான விளையாட்டு முக்கியத்துவமும் இந்தியாவில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் எவ்வாறு வேறுபடுகிறது?" என்ற கேள்விக்கு

``சீனாவுக்குச் சென்று முதன்முதலில் ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பொழுது நமது தேசிய கீதம் ஒலித்தது எங்களுக்கான பெருமை. மற்ற நாட்டில் உள்ளவர்கள் நமது போட்டியாளர்களுக்கு தரும் மதிப்புகூட நமது நாட்டில் இருப்பதில்லை. உலக அளவிலான போட்டிகளுக்கு நமது வீரர்கள் செல்லும்போது அவர்களுக்கான போக்குவரத்துச் செலவு, உணவுக்கான செலவு இன்னபிற செலவுகளுக்கு அரசு மிகக் குறைந்த தொகையே வழங்குகிறது. எனவே, தனியார் ஸ்பான்சர்களை உதவிக்கு நாடுகிறோம். மற்ற நாடுகளில் பெண் போட்டியாளர்களுக்குப் பிற வேலைகள் குறைந்தும், பயிற்சி வகுப்புகள், விளையாட்டு மைதானம், தேவையான வசதிகளை அரசே செய்து தருகிறது. நம் நாட்டில் அதுபோன்ற வசதிகள் இல்லாத நிலையிலும் குடும்பம், குழந்தைகள் என அதில் அதிக கவனம் செலுத்தும் பட்சத்திலும் நம் பெண்கள் அவர்களுடன் சவாலாகப் போட்டியிட்டு வெல்கின்றனர். இப்படி இருக்கும்போது அரசு விளையாட்டுத் துறையின் மீது அலட்சியம் காட்டுவது வேதனைக்குரியது" என ஆதங்கப்பட்டார் சிவகாமி.