வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/09/2018)

கடைசி தொடர்பு:20:00 (24/09/2018)

``நான் தேவையில்லை என்று நினைத்தால், ஓய்வுபெறத் தயார்” - அணி நிர்வாகத்துக்கு மேத்யூஸ் உருக்கமான கடிதம்

அணி நிர்வாகம் விரும்பினால் நான் ஓய்வு பெறத் தயார் என இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

மேத்யூஸ்

photo credit:@ICC

ஆசியக் கோப்பை லீக் சுற்றில் இலங்கை அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என கத்துக்குட்டி அணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வெளியேறியது. இது இலங்கை அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியை அடுத்து இலங்கை அணியில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சண்டிமால் மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், ``ஆசியக் கோப்பை போட்டியின்போது அனைத்து முடிவுகளுமே பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுடன் பரிசீலித்தே எடுத்தேன். அது உங்களுக்கும் தெரியும். தோல்விகளுக்கு நான் மட்டும்தான் பொறுப்பு என்பதுபோல என்னை மட்டும் பலிகடா ஆக்குவது நான் துரோகம் செய்ததுபோல் உணரவைக்கிறது. நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குத் தேவையில்லை என அணி நிர்வாகம் விரும்பினால் கூறுங்கள், நான் ஓய்வு பெறத் தயார். 2013-ம் ஆண்டில் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கேப்டனாக இருந்துள்ளேன். அந்தக் காலகட்டத்தில் எனது தலைமையின் கீழ் இங்கிலாந்துடன் தொடரைக் கைப்பற்றியது, ஆஸ்திரேலியாவை வொயிட்வாஷ் செய்தது, ஆசியக் கோப்பை தொடரை வென்றது என இலங்கை அணி குறிப்பிட்ட சாதனைகளைச் செய்தது. 

அதேநேரம் அணிக்கு புதிய ரத்தம் தேவை என்பதை உணர்ந்த நேரம் நானாகவே வந்து கேப்டன் பதவியில் இருந்து கடந்த வருடம் விலகினேன். ஆனால், அதன்பிறகு பல கேப்டன்கள் மாறினாலும் இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அப்போதுதான் அணியின் பயிற்சியாளராக ஹதுரசிங்கா பொறுப்பேற்றார். அவர் என்னைச் சந்தித்து உலகக்கோப்பை வரை கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தினார். குடும்பத்தினர், நண்பர்கள் வேண்டாம் என வலியுறுத்திய போதிலும் ஹதுரசிங்கா மீது நம்பிக்கை வைத்துப் பொறுப்பை ஏற்றேன். இதுவரை எனது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலே விளையாடி வந்துள்ளேன். கடந்த தென்ஆப்ரிக்க தொடரிலும் கூட அதிக ரன்கள் எடுத்துள்ளேன் என்பதை உங்களுக்கு நினைவுகூர்கிறேன். அணி நிர்வாகத்தின் உத்தரவை அடுத்து உடனடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். அதேநேரம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குத் தேவையில்லை என அணி நிர்வாகம் நினைத்தால் நான் ஓய்வு பெறுவது குறித்துப் பரிசீலிக்கிறேன்" என உருக்கமாகக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க