வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (25/09/2018)

கடைசி தொடர்பு:08:40 (25/09/2018)

‘இந்தியாவின் டாப்-3 ஓகே’ - மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்  ‘சுப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், அணிகள் பங்கேற்று விளையாடிவருகின்றன. இதில், லீக் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்த ஹாங்காங், இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறின. ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றன. இன்று நடைபெறும்  லீக் சுற்றுப் போட்டியில், இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ‘சூப்பர் 4’ சுற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஆப்கானிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இன்று நடைபெறும் ஆட்டம் சம்பிரதாயத்துக்கு நடக்கும் போட்டியாகவே இருக்கும். இருப்பினும், இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில்தான் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது, எனவே, இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில், இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் முதன்முறையாக மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் லீக் சுற்றுப்போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 134 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்தச் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் போராடித் தோற்றது. இந்தப் போட்டிகளில், இறுதி ஓவர்களில்தான் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. எனவே, இந்தப் போட்டி இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டதால், இந்திய வீரர்கள் சற்று பதற்றம் இல்லாமல் விளையாடுவர்.

தோனி
இந்திய அணியைப் பொறுத்தவரை ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் டாப்-3 பேட்ஸ்மேன்களே ஆட்டத்தை முடித்துவைத்துவிட்டனர். இதனால், மிடில் - ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோனி 33 ரன்கள் அடித்தார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் (33), கேதர் ஜாதவ் (28) ரன்கள் எடுத்தனர். மற்ற போட்டிகளில், இவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இன்றைய போட்டியில் இவர்களைப் பயன்படுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா திட்டமிடலாம். இறுதிப்போட்டிக்கு முந்தைய போட்டியில், மிடில்-ஆர்டரை சோதிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.

இந்தத் தொடரில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். பும்ரா, காயத்தில் இருந்து மீண்டு வந்த புவனேஷ்வர் குமார், சுழற்பந்துவீச்சாளர்கள்  ஜடேஜா, சாஹல் ,குல்தீப் யாதவ் போன்றோர் சிறப்பாகப் பந்துவீசிவருகின்றனர். இறுதிப்போட்டிக்குத் தயாராகும் வகையில் இன்றைய போட்டியில் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இவர்களுக்குப் பதிலாக சித்தார்த் கவுல், தீபக் சாஹர் அல்லது கலீல் அஹமது ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.