வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:03 (25/09/2018)

"மீண்டும் கோப்பையை வெல்வோம்" - புது உத்வேகத்தோடு களமிறங்கும் சென்னையின் எஃப்.சி!

நடப்பு ஐஎஸ்எல் சாம்பியன் சென்னையின் எஃப்.சி அணி, புதுப்பொலிவோடு அடுத்த சீசனுக்குத் தயாராகியுள்ளது. பயிற்சியாளர் குழு முதல், வீரர்கள் வரை சிலபல மாற்றங்கள் செய்து, கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்போடு பயிற்சிசெய்துவருகிறது.

மலேசியாவில் 'ப்ரீ- சீசன்' பயிற்சியை முடித்துக்கொண்டு சனிக்கிழமை சென்னை திரும்பிய அணியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. தன் பயிற்சிக் குழுவையும், வீரர்களையும் பயிற்சியாளர் ஜான் கிரகரி அறிமுகப்படுத்திவைத்தார். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியை வழிநடத்திய ஹென்ரிக் செரேனோ, சென்னை அணியிலிருந்து விலகிவிட்டதால், மற்றொரு டிஃபண்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் இந்த ஆண்டு அணியை வழிநடத்த உள்ளார். 

சென்னையின் எஃப்.சி

"செரேனோ மிகச் சிறந்த வீரர். அவரது இடத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் தரமான வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர். சாம்பியன் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய விஷயம். அது எனக்குப் பெருமையாக உள்ளது" என்று கேப்டன்ஷிப் பற்றிக் கூறினார் மெயில்சன். கடந்த ஆண்டு ஆடிய மற்ற வெளிநாட்டு வீரர்களில் ஜேமி காவிலான், ரெனே மெஹிலிச் மற்றும் ஜூட் ஆகியோரும் அணியால் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக எலி சாபியா, ஆண்ட்ரே ஓர்லாண்டி, கார்லோஸ் ஆன்டோனியோ சலோம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

ஐ லீக் தொடரில் சென்னை சிட்டி அணிக்கு ஆடிவந்த தமிழக வீரர் சீனிவாசன் பாண்டியன், இந்த ஆண்டு சென்னையின் எஃப்.சி அணிக்காக விளையாட உள்ளார். மற்றொரு தமிழக வீரர் தனபால் கணேஷ், காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ஜான் கிரகரி தெரிவித்தார். "கோப்பை வெல்வதைவிட, அதைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். இந்த முறை நிறைய இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெற்றி உத்வேகம் அதிகமாக இருக்கிறது. சென்னை அணிக்காக மூன்றாவது கோப்பையை வெல்வோம்" என்றும் கிரகரி கூறினார்.

வரும் 29-ம் தேதி தொடங்கும் ஐஎஸ்எல் ஐந்தாவது சீசனின் தொடக்க போட்டியில் ATK, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, முதல் போட்டியில் 30-ம் தேதி பெங்களூரு எஃப்.சி அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. சென்னை நேரு அரங்கத்தில், முதல் போட்டி அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. அந்தப் போட்டியில் சென்னையின் எஃப்.சி கோவா அணியை எதிர்கொள்கிறது.