வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (25/09/2018)

கடைசி தொடர்பு:15:20 (25/09/2018)

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம்! - ஆட்டோ ஓட்டுநர் மகள் சாதனை

`8 வயதில் இருந்தே, கைகளில் க்ளவுஸ் அணிந்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன்’ என சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற சந்தீப் கவுர் தெரிவித்துள்ளார். 

சந்தீப் கவுர்

பஞ்சாப் மாநிலம் ஹாசன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் சந்தீப் கவுர். குத்துச்சண்டை போட்டியில் வளர்ந்து வரும் நட்சத்திரம். இவர் போலந்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். 16 வயதாகும் சந்தீப் கவுர் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை கரோலினாவை எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சந்தீப் கவுர் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி தங்கம் வென்றார். 


சந்தீப் கவுர் தந்தையின் வருமானம் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளவே சரியாக இருக்கும். இந்த நிலையிலும் அவர் தன் மகள் குத்துச்சண்டையில் ஈடுபட ஊக்கப்படுத்தியுள்ளார். தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளார். சந்தீப் கவுரின் மாமா, கிராமத்தில் உள்ள குத்துச்சண்டை அகாதமிக்குச் செல்வது வழக்கம். அவர்தான் சந்தீப் கவுருக்கு குத்துச்சண்டையில் ஆர்வம் வருவதற்குக் காரணமாக இருந்துள்ளார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், `` சிறுவயதில் எனது மாமாவுடன் எங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள குத்துச்சண்டை அகாதமிக்குச் செல்வேன். அங்கு இளைஞர்கள் குத்துச்சண்டையில் ஈடுபடுவதைக் கண்டேன். வளர வளரக் குத்துச்சண்டை மீது ஆர்வம் வரத் தொடங்கியது. எனக்கு 8 வயதாக இருக்கும்போது கைகளில் கிளவுஸ் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டேன். சுனில் குமார் என்பவரிடம் பயிற்சி மேற்கொண்டேன்” என்றார்.