வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:59 (25/09/2018)

ஐந்து மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா! - மீண்டும் கேப்டனாகத் தோனி #INDvAFG

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. 
 

தோனி

Photo Credit: BCCI

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்று இந்திய அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஆசியக் கோப்பைத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்க தேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியைத் தந்து, கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டது. சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

இந்நிலையில், இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று துபாய் மைதானத்தில் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பை தொடரில் சராசரியாக 250 ரன்கள் எடுத்து வருகிறது. அதன் பின்னர், பந்துவீச்சு மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இவர்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரது பந்துவீச்டை ஐ.பி.எல் போட்டிகளில் அதிகம் எதிர்கொண்டுள்ளது இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கூடுதல் ப்ளஸ். 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் இந்திய அணி, மகேந்திரசிங் தோனி தலைமையில் களம்காண்கிறது. இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரோஹித் ஷர்மா, தவான், பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் சஹால் அகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, தீபக் சஹார், கலீல் அகமது மற்றும் சித்தார்த் கௌல் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய தீபக் சஹார், இந்தப் போட்டி மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.