வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (25/09/2018)

கடைசி தொடர்பு:18:59 (25/09/2018)

`696 நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு!’ - சர்ப்ரைஸ் தோனி

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் எம்.எஸ்.தோனி. 

எம்.எஸ் தோனி

Photo: BCCI

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், இந்திய அணிக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேப்டனாகப் பொறுப்பேற்றார் தோனி. டாஸ் போட இந்திய அணியில் கேப்டன் தோனி மைதானத்துக்கு வந்தது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கேப்டனாகத் தோனிக்கு இது, 200வது சர்வதேச ஒருநாள் போட்டி. 

கடந்த 2017-ம் ஆண்டில் ஜனவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருந்த தொடருக்கு முன்னதாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் தோனி. ஜனவரி மாதம் 4-ம் தேதி பதவி விலகுவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில்  696 நாள்களுக்குப் பின்னர் இன்று அவர் மீண்டும் ஒருநாள் அணிக்கு கேப்டனாகப் பதவியேற்றுள்ளார். அதன் பின்னர், கோலி இந்திய அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார். 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையை மனதில் வைத்துதான், தனது ஓய்வை அறிவித்ததாகத் தெரிவித்தார். ஒருநாள்போட்டியில் இறுதியாகத் தோனி இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டார். 

தோனி

Photo: BCCI

இதுவரை 199 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகத் தோனி செயல்பட்டிருக்கிறார். அதில், 110 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் வெற்றி சராசரி 58.51%. ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகத் தோனி 6,633 ரன்கள் எடுத்துள்ளார். தோனி தலைமையில் இந்திய அணி 2007-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

டாஸுக்குப் பின்னர் பேசிய தோனி, ``இதுவரை நான் 199 போட்டிகளுக்கு கேடனாக இருந்துள்ளேன். அதனால் இந்த வாய்ப்பு மூலம் 200 வது போட்டியில் கேப்டனாக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 200 போட்டிகள் என்பது சிறப்பானதுதான். அதைத் தாண்டி அதில் பெரிதாக எதுவும் இல்லை” என்றார் வழக்கம்போல் கூலாக...