வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (25/09/2018)

கடைசி தொடர்பு:21:34 (25/09/2018)

ஆப்கானிஸ்தான் அணியின் மோஸ்ட் வான்டட் பேட்ஸ்மேன்... யார் இந்த முகமது ஷஷாத்? #MohammadShahzad

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து மிரட்டல் காட்டியுள்ளார் ஆப்கான் வீரர் முகமது ஷஷாத்.

முகமது ஷஷாத்

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக அரை சதமடித் ஷஷாத், இன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 88 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் சதமடித்து அசத்தினார். இது இவரின் 5வது சதமாகும். மேலும், இந்தியாவுக்கு எதிராகச் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் எவருமே இந்தியாவுக்கு எதிராக சதம் அடிக்காமல் இருக்க, இவர் சதம் அடித்து அசத்தியுள்ளார். 

யார் இந்த ஷஷாத்?:

அதிரடிதான் இவரது பாணி. எந்தப் பந்தாக இருந்தாலும் அதை அடித்து ஆடவே நினைப்பார். இவரது ஆட்டத்திறன்தான் இவரது பெரும் பலம். விக்கெட் கீப்பரான இவரை பற்றிய சின்ன பிளாஷ்பேக் இதோ...

முகமது ஷஷாத்

ஆப்கானிஸ்தான் அணிக்காக ஜிம்பாப்வே லெவன் அணிக்கெதிராகக் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டியில் இவர் அறிமுகமானார். அதே ஆண்டின் இறுதியில் நெதர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் அவர் இடம்பிடித்தார். அதில், 110 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை அவர் ஈட்டித்தந்தார். இதன்மூலம், சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார். அன்று முதல் இன்று வரை ஆப்கானிஸ்தான் அணியின் கொண்டாடப்படும் பேட்ஸ்மேனாக வலம் வரும் ஷஷாத்தின் கரியர், அதன்பின்னர் ஏறுமுகம் கண்டது. 

2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அயர்லாந்து அணிக்கெதிரான டி20 போட்டியில், தனது 22 வயதிலேயே ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகவீரராகக் களமிறங்கினார். அதே ஆண்டில் கனடா அணிக்கெதிரான இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான தொடரில் இரட்டை சதமடித்த (214 நாட் அவுட்) அவர், ஃப்ர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். அந்தப் போட்டியில் கனடா அணி நிர்ணயித்த 494 ரன்கள் இலக்கை ஆப்கானிஸ்தான் அணி எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அதேபோல், டி20 போட்டி ஒன்றில் அதிக விக்கெட்டுகள் (5) வீழக் காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை ஷஷாத் வசமே இருக்கிறது. 

ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் பகுதியைச் சேர்ந்த ஷஷாத், இந்தியாவிலேயே பெரும்பான்மையான நாள்களைக் கழித்திருப்பதால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைத் தனது நெருங்கிய நண்பர் என்கிறார். சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்டில் இந்திய அணிக்கெதிராகக் களமிறங்கியது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் சார்பில் விளையாடிய 11 வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இவர் களம் இறங்கியபோது, ஆள் பார்க்க தொப்பையுடன் இருக்க, பலர் சிரித்தனர். ஆனால், தென்னாப்பிரிக்க பவுலர்களையே கண்ணீர்விட வைக்கும் அளவுக்கு அந்தப் போட்டியில் சாத்து சாத்து எனச் சாத்தினார். ஸ்டெயினின் பந்துவீச்சை எதிர்கொள்ள பயமில்லை என அப்போது ஜாலியாகப் பேட்டியும் தந்தார். அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடம் ஷஷாத்துக்கு.

அதே ஆண்டில், ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 போட்டியில் 118 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் ஆறாவது அதிக ஸ்கோரை தன் வசமாக்கினார். அதன் மூலம் டி20 தரவரிசையில் எட்டாவது இடத்துக்கு முன்னேறினார். அடுத்தடுத்து அதிரடி காட்டிய இவர் இதுவரை 77 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதம் 13 அரைசதம் உட்பட 2,544 ரன்கள் குவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் இவரே. 64 டி20 போட்டிகளில் ஒரு சதம், 11 அரைசதங்கள் உள்பட 1860 ரன்கள் எடுத்துள்ளார்.

முகமது ஷஷாத்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஷஷாத் மட்டும் 124 ரன்கள் எடுத்தார்.