வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (25/09/2018)

கடைசி தொடர்பு:20:52 (25/09/2018)

ஷஷாத், முகமது நபி அதிரடி! - இந்தியாவுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான் #INDvAFG

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது.

 ஷஷாத்

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரராக ஷஷாத் மற்றும் அஹ்மதி இறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை கலீல் அகமது மற்றும் தீபக் சஹார்  தொடங்கினர். தொடக்கம் முதலே ஷஷாத் அதிரடியாக விளையாடினார். முதல் பந்திலிருந்தே அவர் டி20 மோடில்தான் விளையாடினார். 

தொடக்கத்தில் ஷஷாத் தவிர்த்து மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அஹ்மதி 5 ரன்களிலும், ரஹ்மத் ஷா 3 ரன்களிலும், ஷாகித் மற்றும் ஆப்கான் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனாலும், மறுபுறம் ஷஷாத் சிக்ஸரும் பவுண்டரியுமாக வானவேடிக்கை காண்பித்தார். நயீப் 46 பந்துகளுக்கு 15 ரன்னில் ஆட்டமிழக்க நபியுடன்  கூட்டணி சேர்ந்தார் ஷஷாத். சிறப்பாக விளையாடிய ஷஷாத் சதம் அடித்தார். 116 பந்துகளில் 124 ரன்கள் குவித்த அவர், கேதர் ஜாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 5வது சதமாகும். ஷஷாத் ஆட்டமிழந்த பின்னர், நபி அதிரடி காட்டினார். 64 ரன்கள் எடுத்த நபி, கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்திய அணி வெற்றி பெற 253 ரன்கள்  என்ற சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது ஆப்கானிஸ்தான்.