வெளியிடப்பட்ட நேரம்: 01:41 (26/09/2018)

கடைசி தொடர்பு:10:35 (26/09/2018)

சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஸ்; இந்தியாவைத் திணறடித்த ஆப்கானிஸ்தான் - டிராவில் முடிந்த இறுதி ஓவர் சுவாரஸ்யம்

ஆசியக் கோப்பைத் தொடரின் 'சூப்பர் 4' சுற்றில் ஆப்கானிஸ்தான் - இந்திய அணி மோதிய போட்டி டிராவில் முடிந்தது. 

ஆசிய க்கோப்பைத் தொடரின் 'சூப்பர் 4' சுற்றில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். சிறப்பாக பேட் செய்த ஆப்கானிஸ்தான், 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

49 பந்துகளில் 57 ரன்கள் குவித்த நிலையில், அம்பதி ராயுடு, நபி பந்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுலும் 60 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தோனி, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில், 9 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், கடைசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. பேட் செய்யும் இடத்தில் ஜடேஜாவும் மறுபுறம் கலீல் அஹமதுவும் இருந்தனர்.

முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத ஜடேஜா, இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன் அடிக்க, கலீல் பேட் செய்யும் இடத்துக்கு வந்தார். நான்காவது பந்தில் அவர் ஒரு ரன் அடிக்க, போட்டி டிராவானது. அப்போது, 2 பந்துகளில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்று இருந்தது. இந்திய அணி வீரர்களும் ரசிகர்களும், உற்சாகமாக கோஷம் எழுப்பிக்கொண்டிருக்க, ஐந்தாவது பந்தை எதிர்கொண்டார் ஜடேஜா. 6 அடிக்கும் முயற்சியில் ஜடேஜா அந்தப் பந்தை உயர்த்தி அடிக்க, நஜிபுல்லா லாகவமாக கேட்ச் பிடித்தார். இறுதியில், போட்டி டிராவில் முடிந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஃப்தாப் அலம், முகமது நபி, ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஏற்கெனவே, இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணியில் 124 ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் முகம்மது ஷஷாத்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.