‘ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?’ - சூப்பர் 4 சுற்றில் பாக்., வங்கதேசம் இன்று மோதல்  | Asia cup 2018: Pakistan vs Bangladesh Fights today

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (26/09/2018)

கடைசி தொடர்பு:09:30 (26/09/2018)

‘ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?’ - சூப்பர் 4 சுற்றில் பாக்., வங்கதேசம் இன்று மோதல் 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ‘சுப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள்  இன்று மோதுகின்றன.

கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் ஹாங்காங் அணியுடன் வெற்றி, இந்தியாவுடன் தோல்வி கண்டது. புள்ளிகள் அடிப்படையில் அந்த அணி ‘சுப்பர் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்தச் சுற்றில், ஆப்கானிஸ்தானைப் போராடி வென்றது. இந்த மேட்ச் இறுதி ஓவர் வரை சென்றது. அதற்கு அடுத்த போட்டியில், இந்தியாவிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கத்துக்குட்டி அணிகளுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவுடன், இரண்டு போட்டிகளிலும் மரண அடி வாங்கியது. இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

மோர்தசா தலைமையிலான வங்கதேசம் அணி, லீக் சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில், ஆப்கானிஸ்தானுடன் 136 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. புள்ளிகளின் அடிப்படையில் ‘சூப்பர் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்தச் சுற்றில் இந்தியாவுடன் தோல்வி, ஆப்கானிஸ்தானுடன் வெற்றி என இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. இன்று நடைபெறும் ‘சூப்பர் 4’சுற்றின் கடைசிப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.