வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (26/09/2018)

கடைசி தொடர்பு:13:29 (26/09/2018)

டிசம்பரில் சாய்னா நேவாலுக்கு டும்.. டும்.. டும்..? - பேட்மின்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்த வருட இறுதியில், தன் துறையில் உள்ள சக வீரரும்  நீண்ட நாள் காதலருமான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். 

சாய்னா நேவால்

PhotoCredits : Twitter/@NSaina

ஹரியானாவைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கியவர். இவரின் வரவுக்குப் பின்பு, இந்தியாவில் பேட்மின்டன் விளையாட்டு கூடுதல் கவனம்பெற்றது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, சீன ஓப்பன் என பேட்மின்டன் விளையாட்டில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் சாய்னா. மேலும், சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் திகழ்ந்துள்ளார். 

சாய்னாவுக்கு, வரும் டிசம்பரில் திருமணம் நடக்கவிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அவர், தன் துறையைச் சேர்ந்த சக வீரரும் நீண்ட நாள் காதலருமான பருபல்லி காஷ்யப்பை (Parupalli Kashyap) திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம், டிசம்பர் 16-ம் தேதி குடும்பத்தார் முன்னிலையில்  நடைபெற உள்ளது. டிசம்பர் 21-ம் தேதி, பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்திய விளையாடுத்துறையில் தீபிகா பல்லிக்கல் - தினேஷ் கார்த்திக், இஷாந்த் ஷர்மா-ப்ரதிமா சிங், மல்யுத்த வீராங்கனை கீதா போகட்- பவர் குமார் இவர்களைத் தொடர்ந்து தற்போது, சாய்னாவும் காஷ்யப்பும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த அனைத்து தம்பதிகளும் தங்களின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

சாய்னா நேவாலும் காஷ்யப்பும் பயிற்சியாளர் கோபிசந்தின் கீழ் பயிற்சிபெற்றவர்கள். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்கும் இருந்த நட்பு பிற்காலத்தில் காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருந்த காதலை நீண்ட காலமாக வெளியில் சொல்லாமல் மறுத்துவந்தனர். இந்நிலையில், இவர்களின் குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.