வெளியிடப்பட்ட நேரம்: 01:48 (29/09/2018)

கடைசி தொடர்பு:07:47 (29/09/2018)

இறுதி ஓவர் பரபரப்பு - ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி

ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி, ஏழாவது முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. 

தோனி

ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 222 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய தவான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 37 ரன்களிலும் தோனி 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி மூன்று ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. 5 விக்கெட்டுகள் மீதமிருந்தது. ஜடேஜா 21 ரன்களிலும் புவனேஸ்வர் 20 ரன்களிலும் களத்தில் நின்றனர். ரூபேல் வீசிய அந்த ஓவரில், இரண்டாவது பந்தில் ஜடேஜா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதையடுத்து, அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. அடுத்து, 48-வது ஓவரில் முஸ்தவிஷர் வீசிய பந்தில் புவனேஸ்வர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசி ஒரு ஓவரில் 6 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை இருந்தது. கேதர் ஜாதவ்வும் குல்தீப் யாதவ்வும் களத்தில் இருந்தனர். இறுதி ஓவரில் முதல் இரு பந்துகளில் தலா ஒவ்வொரு ரன் கிடைத்தது. மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தன. ஐந்தாவது பந்தில் கிடைத்த ஒரு ரன்னின் மூலம் போட்டி ட்ராவானது. இறுதி ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்கவேண்டிய சூழல் இருந்தது. மைதானத்தில் தொற்றிய பதற்றத்துக்கிடையில், ஒரு ரன்னை அடித்து இந்திய அணி வெற்றிபெற்றது. அதையடுத்து, இந்தியா ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. வங்கதேசம் அணி சார்பில் முஸ்தவிஷர் ரஹ்மான் மற்றும் ரூபெல் ஹோசைன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.