வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (02/10/2018)

கடைசி தொடர்பு:06:45 (02/10/2018)

``ஆர்.டி.ஐ சட்ட வரம்புக்குள் பிசிசிஐ” -மத்திய தகவல் ஆணையம் அதிரடி! #BCCI

இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இனி பொதுமக்களின் கேள்விகளுக்கு பிசிசிஐ பதில் சொல்லி தான் ஆகவேண்டும். 

பிசிசிஐ

சர்வதேச அரங்கில், பிசிசிஐ அதிக செல்வாக்கு பெற்ற ஒரு கிரிக்கெட் வாரியமாக உள்ளது. பிசிசிஐ நிர்வாகம் தொடர்பாக ஏதாவது பிரச்னை வரும்போது, எழும் கேள்விகளுக்கு, தன்னை ஒரு தனியார் அமைப்பாகக் கூறிக்கொள்ளும். ஆனால், இனி அது முடியாது. மத்திய தகவல் ஆணையம் இந்திய கிரிக்கெட் வாரியத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. 

இது தொடர்பாக முடிவெடுக்கக் காரணமாக இருந்தது, கீதா ராணி என்பவரது ஆர்.டி.ஐ மனு. அவரது மனுவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குறித்தும் அதற்குக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதில் வரவில்லை. இதனால் அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான விசாரணையில் தான் பிசிசிஐ -யை ஆர்.டி.ஐ வரம்புக்குள் கொண்டுவர முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய தகவல் ஆணையம்  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,  ``பொதுமக்களின் கேள்விகளை முறையாகப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அடுத்த 15 நாள்களில் எடுக்க பிசிசிஐ -க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரிகளையும் நியமிக்கும்படி பிசிசிஐ -யிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார். இதன்மூலம் பிசிசிஐ மற்றும் அதன் மாநில சங்கங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் ஆர்.சி.ஐ மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.