வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (02/10/2018)

`ஸ்டீவ் வாக் ஒரு சுயநலவாதி’ -சுயசரிதை புத்தகத்தில் ஷேன் வார்னே கடும் தாக்கு

வார்னே

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்(Steve Waugh) குறித்து விரைவில் வெளியாகவுள்ள தன்னுடைய புதிய புத்தகமான நோ ஸ்பின்னில்(No Spin) எழுதியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே(Shane Warne). அந்த புத்தகத்தின் சில பகுதிகளை டைம்ஸ் இதழ் வெளியிட்டது. அதில், `எனக்கு அணியில் இடம் கிடைக்காததுக்கு ஸ்டீவ் வாக்தான் காரணம். நான் உடன் விளையாடிய வீரர்களிலேயே ஸ்டீவ்தான் மிகவும் சுயநலவாதி. தன்னுடைய பேட்டிங் சராசரி 50 இருப்பது பற்றிய கவலையைத் தவிர அவருக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1999-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த தொடரின் 4 -வது டெஸ்ட் போட்டியில் தன்னை அணியிலிருந்து நீக்கியது மிகவும் மன உளைச்சலைத் தந்தது என்றும் அதில் குறிப்பிடுகிறார் வார்னே. 

இந்த தொடரில்தான் பிரையன் லாரா கிரிக்கெட் உலகின் புகழ்பெற்ற இரட்டை சதம் ஒன்றை விளாசி தனியாளாக மே. இந்திய தீவுகளுக்கு வெற்றியைப் பெற்று தந்தார். இந்தத் தொடரில் துணைக் கேப்டனான ஷேன் வார்ன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையே எடுத்திருந்தார். இதனையடுத்து 4 வது டெஸ்ட்டில் துணை கேப்டனையே கேப்டன் ஸ்டீவ் வாக் நீக்கினார். 

வீரர்களைத் தேர்வு செய்யும்போது ஆலன் பார்டர் தனக்கு ஆதரவாகப் பேசினாலும் அப்போது ஸ்டீவ் வாக் என்னை வெளியேற்றுவதையே பேசினார். நன்றாக விளையாடவில்லையெனில் வெளியேற்றப்படுவது இயல்புதான். ஆனால் அங்கு அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருந்தது. ஸ்டீவ் வாக்கின் பொறாமை. அணித்தேர்வுக்கு பிறகு ஸ்டீவ் வாக் என்னிடம் வந்து அறிவுரை வழங்க ஆரம்பித்துவிட்டார். இது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் சில வீரர்கள் ஸ்டீவ் வாக் கேப்டன்சி, பீல்டிங் வியூகம் குறித்து என்னிடம் விமர்சனம் செய்தனர். நான் அப்போது கூட ஸ்டீவ் வாக் -க்கு ஆதரவாகவே பதில் அளித்தேன். ஆனால் அவர் எனக்கு ஆதரவாக இல்லை. கேப்டனாகியவுடன் ஸ்டீவ் முற்றிலும் மாறிவிட்டார். இவ்வாறு அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். 

1999 ஆம் ஆண்டு மே. இந்திய தீவுகளுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்று பின்தங்கியிருந்த ஆஸ்திரேலியா அணி, கடைசி போட்டியை வென்று சமன செய்தது.