வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (02/10/2018)

கடைசி தொடர்பு:16:55 (02/10/2018)

`ஹாங்காங்கில் கிரிக்கெட்டராக இருப்பது கடினம்!’ - 21 வயதில் ஓய்வை அறிவித்த வீரர்

ஹாங் காங்கில் கிரிக்கெட்டராக இருப்பது மிகவும் கடினமான ஒன்று என்று கூறி சர்வதேச கிரிக்கெட்டிருந்து ஓய்வுபெறுவதாக 21 வயதான இளம் வீரர் கிறிஸ் கார்ட்டர் அறிவித்திருக்கிறார். 

ஹாங்காங் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கார்டர்

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் ஹாங் காங் அணியும் பங்கேற்றது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முதலிடம் பிடித்ததன் மூலம் ஆசியக் கோப்பை தொடருக்கு ஹாங் காங் அணி தகுதிபெற்றிருந்தது. இந்திய அணிக்கெதிரான ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டஃப் பைட் கொடுத்த அந்த அணியின் விக்கெட் கீப்பராக 21 வயது இளம் வீரர் கிறிஸ்டோபர் கார்டர் விளையாடினார். ஆசியக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றோடு ஹாங் காங் வெளியேறிய நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கிறிஸ். 

பைலட் ஆவதே தனது கனவு என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய கிறிஸ் கார்டர், `கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் பைலட் ஆவதற்கான படிப்பிலிருந்து பாதியில் விலகினேன். தற்போது எனது கனவை நிறைவேற்றுவதற்காகக் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். ஹாங் காங்கில் கிரிக்கெட் போட்டிகளுக்காகக் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. இதனால், அங்கு முழுநேர கிரிக்கெட்டராக இருப்பது கடினம். மார்க் ரைட் மற்றும் சிமோன் குக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஹாங் காங் அரசு தரப்பிலோ அல்லது ஐசிசி தரப்பிலோ உரிய ஒத்துழைப்புக் கிடைப்பதில்லை’’ என்று பொங்கியிருக்கிறார். தனது பைலட் கனவை நிறைவேற்றுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறார் கிறிஸ் கார்டர்.