ஆசியக் கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு ஏன்? - ரவி சாஸ்திரி விளக்கம் | Ravi Shastri Reveals Reason Why Virat Kohli Was Rested From Asia Cup

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (02/10/2018)

கடைசி தொடர்பு:07:00 (03/10/2018)

ஆசியக் கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு ஏன்? - ரவி சாஸ்திரி விளக்கம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏன் ஆசியக்கோப்பை தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது என்பது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துளார். 

சாஸ்திரி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1 - 4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. வீரர்களைத் தேர்வு செய்ததில் குழப்பம், ரவி சாஸ்திரியின் கை அணியில் ஓங்கியிருக்கிறது என முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆலோசகர்கள் எனப் பலரும் விமர்சனங்களை அடுக்கினர். இந்த நிலையில், ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தத் தொடரில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இருப்பினும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் உள்ளிட்ட அணிகளுடன் இந்தியா போராடியே வெற்றிகண்டது. 

வெற்றிக்குப்பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். ``இங்கிலாந்தில் விளையாடியது கிரிக்கெட்டின் வேறு ஃபார்மட். அங்கும் நாங்கள் மிகச்சிறப்பாகவே விளையாடினோம். 4-1 என்ற நம்பர் எங்கள் அணியினர் போராடிய விதத்தை முழுமையாகச் சொல்லாது'' என அவர் கூறியதும், கேப்டன் கோலிக்கு ஆசியக்கோப்பை தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதும் சர்ச்சையானது. பலரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இந்த நிலையில், கோலிக்கு ஆசியக்கோப்பை தொடரில் இருந்து ஏன்  ஓய்வு அளிக்கப்பட்டது என ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து கல்ஃப் நியூஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``விராட் கோலிக்கு இந்த ஓய்வு தேவையான ஒன்று. உடல் ரீதியாக அவர் ஒரு காளை. அவரைக் களத்தில் இருந்து வெளியே எடுத்துவிட முடியாது. விராட் விளையாடுகிறார் என்றால் அவர் எப்படி ஆட்டத்தைக் கையாள்வார் என்று உங்களுக்கே தெரியும். ஆனால், மனரீதியான சோர்வு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த இடைவெளி புதிய தெம்புடன் உற்சாகமாக அவர் கிரிக்கெட் விளையாட உதவும். இதேபோன்ற நடைமுறை மற்ற வீரர்களுக்கும் பின்பற்றப்படுகிறது. பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததுதான்" எனக் கூறியவர் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி வரும் செய்திகளுக்கும் விளக்கம் அளித்தார்.

``என்னைப் பற்றி பேசுவதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. மற்றவர்கள் பேசுவதையெல்லாம் நான் பொருட்படுத்துவது கிடையாது. அதைப் பற்றி நான் யோசிக்கத் தொடங்கினால், நான் உருக்குலைந்து உட்கார்ந்துவிடுவேன். வேலை நேரம் போக எனக்குத் தூங்க மட்டுமே நேரம் கிடைக்கிறது. இதுபோன்ற செய்திகளைப் படிப்பதற்கெல்லாம் எனக்கு நேரம் கிடையாது. நான் ஏதாவது பேச வேண்டும் என நினைத்தால் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் எனது கருத்தைப் பதிவிடுவேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க