வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (04/10/2018)

கடைசி தொடர்பு:09:08 (04/10/2018)

`தவறுகளை திருத்திக்கொள்ளுமா இந்தியா’ - வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று முதல் டெஸ்ட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

கிரிக்கெட்

ஆசியக் கோப்பையை ஒரு வழியாக வென்றாகி விட்டது. ஆனால், இந்திய அணி இங்கிலாந்திடம் வாங்கிய அடியிலிருந்து இன்னும் மீளவில்லை என்பதற்குச் சான்று ஆசியத் தொடரில் செய்த பல சொதப்பல்கள். இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா உடனான தொடரில் இந்தியா விளையாடவுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இந்த இரு ஓவர்சீஸ் தொடருக்கிடையே இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் அதுவும் சொந்த மண்ணில். இந்தத் தொடரிலும் ஆசியக் கோப்பைப் போல் நிதானமின்மையையும், மேம்போக்கான ஆட்டத்தையும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் தோல்வி உறுதியாகி விடும்.

களத்துக்குள் நடக்கும் குழப்பத்தைவிட களத்துக்கு வெளியே நடக்கும் குழப்பம்தான் அணியினர் மத்தியில் பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. இங்கிலாந்து தொடர் தந்த தோல்வியிலேயே சுதாரித்து இருக்க வேண்டிய இந்திய அணி ஆசியத் தொடரிலும் அதே தவறைத் தான் செய்தது. இந்தத் தொடரிலும் மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷாவை தேர்ந்தெடுத்திருக்கும் இந்திய அணி கே.எல்.ராகுலோடு யாரை ஓப்பனராக இறக்குவது என்பதில் தீர்க்கமான முடிவை இன்று வரை எடுக்கவில்லை.
கேப்டன் கோஹ்லியோ ``புதுமுக வீரர்களுக்கு அவர்களின் திறமையை நிரூபிக்கச் சமமான வாய்ப்பு வழங்கப்படும்" எனக் கூறினார்.

இந்தப் போட்டியில் ப்ரித்வி ஷாவுக்கே வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்திய செலக்ஷனில் லாஜிக் என்பதற்கு முற்றிலும் இடமில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் கூட ஹனுமத் விகாரியை அனுமதித்த இந்தியா கடைசி வரையிலும் கருண் நாயரை பெவியிலினிலேயே வைத்திருந்தது.

பேட்டிங் ஆர்டர் மட்டுமின்றி பௌலிங்கிலும் அதே கதி தான் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என 3 ஸ்பின்னர்களோடு களமிறங்குவதா? இல்லை குல்தீப்புக்குப் பதிலாக ஷர்துல் தாகூருக்கு முதல் சர்வதேச டெஸ்ட் வாய்ப்பு அளிப்பதா? என்பதே..! இதைப் பற்றி கேப்டன் கோஹ்லியிடம் கேட்டபோது ``இம்முடிவுகள் ஒருவர் எடுத்தவையல்ல, எதிர்கால நோக்கத்தோடு எடுக்கப்பட்டவை" என சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

டெஸ்ட் தொடரில்தான் இவ்வளவு குளறுபடிகளாக என்று பார்த்தால் ஒரு நாள் போட்டிகளில் அதற்கும் மேல். ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றி மாற்றி மொத்த மிடில் ஆர்டரையும் துவம்சம் செய்து வைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கவுன்சில் இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் காரணம் என்பது மிகப் பெரிய வருத்தமே!!!

மொத்தத்தில் இன்று தொடங்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் இதுவரை இந்தியா செய்த தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பான ப்ளேயிங் லெவனை உருவாக்க கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு. திருத்துவதும் திருத்தாமல் 'சிறந்த அணி இந்தியா தான்' என்று வீண் பெருமை பேசுவதும் இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கும், பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரிக்கும் வெளிச்சம். இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்குகிறது.