வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (04/10/2018)

கடைசி தொடர்பு:10:02 (04/10/2018)

‘டெஸ்டில் அடியெடுத்து வைத்த ப்ரித்வி ஷா!’- டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

கிரிக்கெட்


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 2 டெஸ்ட், 5ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில்  நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்த வரையில் கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் என டாப் ஆர்டர் பலமாக தான் உள்ளது. மிடில் ஆர்டரில் அனுபவ வீரரான அஸ்வின், ஜடேஜா வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சிலும் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி என சீனியர்கள் உள்ளனர். இந்த டெஸ்டில் ப்ரித்வி ஷா, ரிஷாப் பாண்ட், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்நிய மண்ணில் விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலாகவே இருக்கும். இருப்பினும் நிதானமான ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கலாம். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி இந்தத் தொடரை முழுமையாக வெல்லும் நோக்கத்தில் களமிறங்கும். ப்ரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார். அவரை இந்திய வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கேப்டன் கோலி ப்ரித்வி ஷாவுக்கு தொப்பி அணிவித்தார்.