வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:48 (04/10/2018)

நெருக்கடியில்லாமல் ஆடுவதில் இவர் கில்லி..! - யார் இந்த ப்ரித்வி ஷா?

தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார் ப்ரித்வி ஷா. இதையடுத்து, குறைந்த வயதிலேயே முதல் போட்டியில் சதம் அடித்த 4 வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ப்ரித்வி ஷா

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இன்று அறிமுக வீரராகவும் இந்தியா அறிமுகப்படுத்தும் 293 வது டெஸ்ட் வீரராகவும் தனது 18 வது வயதில் களமிறங்கிய ப்ரித்வி ஷா தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் குறைந்த வயதில் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 4 வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

யார் இந்த ப்ரித்வி ஷா?

தனது 14 ம் வயதில் மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான மேட்ச்சில் 546 ரன்கள் எடுத்துள்ளார். 

17 வயதில் ரஞ்சி டிராபியில் அடியெடுத்து வைத்த அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்ததுடன் அப்போதே சச்சினின் சாதனையை முறியடித்தார்.

2016-ம் ஆண்டு இந்தியாவின் U19 பிரிவில் விளையாடிய அவர் இளைஞர் ஆசியக் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்.

2017-ல் விஜய் ஹாசாரே டிராபி, துலீப் டிராபி என அசத்திய இவர். இதே ஆண்டியில் நடைபெற்ற U19 உலகக் கோப்பையில் இந்திய அணியைத் திறம்பட வழிநடத்தி 4 வது முறையாகக் கோப்பையை வெற்றி பெறச் செய்தார்.

கடந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியவர் வெறும் 9 போட்டிகளில் மட்டும் விளையாடி 245 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதில் அறிமுகமான இரண்டாவது வீரர் என்ற பெருமையோடு இன்று களத்துக்கு வந்த இவர், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராகுல் விக்கெட் இழந்ததைக் கண்டு பதறாமல், புஜாராவோடு சேர்ந்து வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்த இவர் 56 பந்துகளில் அரைசதம் கடந்தார். பேஸாக இருந்தாலும் சரி ஸ்பின்னாக இருந்தாலும் சரி பௌவுலர்களால் தனக்கு எந்த நெருக்கடியுமில்லாமல் பார்த்து ஆடுவதில் இவர் கில்லி.

துலீப் டிராபியில் சச்சினின் சாதனையை முறியடித்த இவரின் ஷாட்களும் சச்சினை ஞாபகப்படுத்துவதாகவே இருக்கும். அவரின் பொசிஷனாகட்டும், டீப் மிட் விக்கெட்டில் அடிக்கும் பவுண்டரிகளாகட்டும் எல்லாம் சச்சினின் அம்சங்கள்.

15 பவுண்டரிகளுடன் 99 பந்துகளில் தொடக்க ஆட்டத்திலேயே சதமடித்து தன் ஆட்டத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை  இந்திய அணியில் பிடித்துள்ளார் இந்த சின்ன சச்சின். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா பெயர் இடம்பெற்றாலும், போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இன்று கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி திறமையை நிரூபித்துள்ளார்.