வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:10:51 (05/10/2018)

``நான் இங்கிலாந்திலே தயாராகத்தான் இருந்தேன்” சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த ப்ரித்வி நெகிழ்ச்சி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று  ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் அபாரமாக ஆடிய அறிமுக வீரர் ப்ரித்வி ஷா சதம் அடித்து அசத்தினார். அவருக்குப் பல முன்னாள் இன்னாள் வீரர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  `தொடர்ந்து அச்சமில்லாமல் விளையாடு’ என்று இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் வாழ்த்தினார். இந்திய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்,  ``ப்ரித்வி ஷா ஆடிய விதம் அறிமுக போட்டியில் ஆடியது போன்று இல்லை. ஏதோ 50 வது போட்டியில் ஆடியது போன்று இருந்தது. அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார்” என்றார். முதல் போட்டியிலே தேர்வுக்குழு தலைவரை கவந்துவிட்டார் ப்ரித்வி.

ப்ரித்வி ஷா 

அறிமுக போட்டியில் சதம் அடிப்பது ப்ரித்வி ஷாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளான ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி தொடர்களிலும் தனது அறிமுகப்போட்டியிலே சதமடித்து அசத்தியுள்ளார். முதல் போட்டியில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ப்ரித்வி, சிறப்பான இந்தச் சதத்தை தனது தந்தைக்கு சமர்ப்பித்துள்ளார். 

நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்தபின்னர் பேசிய ப்ரித்வி,  ``இந்த அறிமுகப் போட்டியில் அடித்த சதத்தை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் எனக்காகப் பல தியாகங்களைச் செய்துள்ளார். அதைச் சொல்லக்கூட முடியாது. அவ்ளோ தியாகங்கள் செய்துள்ளார். எல்லாம் எனக்காகதான். நான் எப்போ சதமடித்தாலும் முதலில் என் தந்தைதான் நினைவில்கொள்வேன். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது முதலாவது சதம். இது முழுக்க முழுக்க அவருக்குதான். கிரிக்கெட் குறித்து அவருக்கு அதிகம் தெரியாது. போட்டிக்கு முன்னர் அறிமுகப் போட்டியை அனுபவித்து விளையாடு என்று மட்டும் சொன்னார். 

ஷா

இங்கிலாந்து தொடரில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் தேர்வாகியிருந்தேன். அப்போதே எனது அறிமுக போட்டிக்கு நான் தயாராகதான் இருந்தேன். வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. அது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவு. ஆனால், இங்கிலாந்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. விராட் கோலி என்னிடம், இங்கு சீனியர் ஜூனியர் எல்லாம் கிடையாது, அனைவரும் நண்பர்கள்தான் என்றார். ஆம், இப்போது அனைவரும் நண்பர்கள். இன்று பிரஷர் இல்லாமல் இயல்பாக விளையாடுவதற்கு இங்கிலாந்து தொடருக்கு தேர்வானது முக்கிய காரணமாக சொல்வேன். 

தொடக்கத்தில் சற்று பதற்றத்துடன்தான் விளையாடினேன். ஆனால், சிறிது நேரத்தில் எனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி விட்டேன். பந்துவீச்சாளர்களை நெருக்கடியில் வைத்திருக்க விரும்புவேன். இன்றும் (நேற்று) அதைச் தான் செய்தேன். மோசமான பந்துக்காக காத்திருந்து விளையாடினேன். முதல் டெஸ்ட் போட்டிக்காக எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும், இந்திய ஏ அணிக்காக விளையாடிய போதும் எப்படி விளையாடினேனோ, அப்படியே இங்கும் விளையாடினேன்” என்றார்.  

சதம் அடுத்த மகிழ்ச்சியில்
 

ப்ரித்வி ஷா, 4 வயதில் இருக்கும்போதே அவரின் அம்மா காலமாகிவிட்டார். அதன் பின்னர், அவரது தந்தையின் வளர்ப்பில்தான் முழுவதும் வளர்ந்தார். அதனால், தந்தை மீது ப்ரித்விக்கு பெரும் பிரியம் உண்டு. இந்த ஆண்டு ப்ரித்வி ஷாவுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக, இந்தியாவுக்குக் கோப்பையை பெற்றுத் தந்தார். அதன் பின்னர் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமானார். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிவிட்டார்.