வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (05/10/2018)

கடைசி தொடர்பு:11:21 (05/10/2018)

‘ஐ.பி.எல் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை சிதைத்துவிட்டது’- ஹூப்பர் வேதனை

ஐ.பி.எல் போட்டிகளில் இடம்பிடிக்கவே  வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் சாடியுள்ளார். 

கார்ல் ஹூப்பர்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர், அந்த அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் குவித்தவர். இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இந்தியாவுக்கு எதிரான போட்டியிலேயே ஓய்வும் பெற்றார். ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பிசினஸ் செய்துவந்தவர் மீண்டும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது நடந்து வரும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வர்ணனையாளராகக் கலந்துகொண்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களையும், ஐ.பி.எல் தொடரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ``வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலருக்கு இப்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதே அதிகபட்ச கனவாக இருக்கிறது. சொந்த நாட்டுக்காக விளையாடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அணி நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையே சம்பள பிரச்னை என்பது முடிந்துவிட்டது.

ஆனாலும் கெயில், பொல்லார்டு, சுனில் நரேன் உள்ளிட்டோர் எல்லாம் டி20 போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவே விரும்புகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத எவரும் முழுமையான கிரிக்கெட் வீரராக முடியாது. இது எனது நம்பிக்கை. பணம் கொழிக்கும் ஐ.பி.எல் ஒப்பந்தத்தில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதே எங்கள் அணி வீரர்களின் ஒற்றைக் குறிக்கோளாக உள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் வெஸ்ட் இன்டீஸை சிதைத்துவிட்டது. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவது ஒன்றும் தவறு கிடையாது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டு அவர்களுக்காக விளையாடாமல் லீக் போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்தினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்" எனக் காட்டமாகப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க