வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:21 (05/10/2018)

`விராட் கோலி, ஜடேஜா அசத்தல் சதம்!’ - முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் குவித்த இந்தியா #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

ஜடேஜா

Photo Credit: ICC

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த இந்திய அணி, முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், ரிஷாப் பன்ட் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டத்தொடங்கினார் பன்ட். அவர் 84 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலி - பன்ட் ஜோடி 133 ரன்கள் குவித்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த கேப்டன் விராட் கோலி, 184 பந்துகளில் சதமடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், இது அவரது       24-வது சதமாகும். 6-வது விக்கெட்டுக்கு கோலியுடன் கைகோத்த ஜடேஜா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விராட் கோலி

Photo Credit: Twitter/Sachin_rt

விராட் கோலி 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, 87 பந்துகளில் அரை சதமடித்தார். அஸ்வின் 7 ரன்களிலும் குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர், கள வீரர்கள் துணையுடன் அதிரடி காட்டிய ஜடேஜா, 132 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவின் முதல் சதம் இதுவாகும். 9-வது விக்கெட்டுக்கு உமேஷ் யாதவுடன் இணைந்து, 55 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா சதமடித்ததும், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி 149.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்திருந்தது.