`பிராட்மேனுக்கு அடுத்து கோலிதான்' - புள்ளி விவரங்கள் சொல்லும் சாதனை! | Virat Kohli hits second fastest to 24 Test tons after Don Bradman

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (05/10/2018)

`பிராட்மேனுக்கு அடுத்து கோலிதான்' - புள்ளி விவரங்கள் சொல்லும் சாதனை!

சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஆட்டமாக விளங்குகிறது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி.

விராட் கோலி

photo credit: Twitter/@bcci

நேற்றைய போட்டியில் சதமடித்து தன் அறிமுகப் போட்டியிலேயே சதம், இளம் வயதில் விரைவான சதம் என்ற சாதனைகளோடு பலரின் ஆச்சர்யத்துக்கும் வாழ்த்துக்கும் சொந்தக்காரர் ஆனார் ப்ரித்வி ஷா.

72 ரன்களோடு முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி இன்று தேவேந்திர பிஷூ ஓவரில் அடித்த பவுண்டரியோடு தனது 24 வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்குப் பின் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். இதுவரை 132 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்தச் சாதனையை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸிமித் முன்னரே நெருங்கினார். ஆனால், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதில் இந்தச் சாதனை கோலியின் வசம் சென்றது.

அதேபோல், 124 ரன்கள் எடுத்திருந்தபோது, டெஸ்ட் போட்டிகளில் நடப்பாண்டில் 1,000 ரன்களைக் கடந்தார் இந்த ரன் மெஷின். இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களைக் கடந்த ஒரே இந்திய வீரர் என்ற புதிய சாதனைக்கும் அவர் சொந்தக்காரரானார். உணவு இடைவேளயின்போது 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இந்திய அணி. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 94 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியா சார்பில் ப்ரித்வி ஷா, கோலி, ஜடேஜா என மூன்று வீரர்கள் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close