ரன் அவுட்டில் நிதானம் ஏன்? -சர்வதேசப் போட்டியில் முதல் சதம் அடித்த ஜடேஜா விளக்கம் | Jadeja shares about his performance against West Indies

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:15 (06/10/2018)

ரன் அவுட்டில் நிதானம் ஏன்? -சர்வதேசப் போட்டியில் முதல் சதம் அடித்த ஜடேஜா விளக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆல் ரவுண்டர் ஜடேஜா சிறப்பாக விளையாடி சர்வதேசப் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை அடித்தார். 

ஜடேஜா

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது அந்த அணி 555 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்கிஸில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா அபாரமாக விளையாடி தனது முதலாவது சர்வதேச சதத்தை அடித்தார். பந்துவீச்சிலும் முதல் பந்திலே விக்கெட் எடுத்து அசத்தினார்.  ஹெட்மெயர் என்ற வீரரை ரன் அவுட்டும் செய்து க்ளீன் ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டினார் ஜட்டு. 

ஜடேஜா

போட்டி முடிந்த பின்னர் தனது ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசினார் ஜடேஜா.  ``இந்தாண்டில் குறைவான போட்டிகளில் தான் விளையாடி உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், என்னை எனக்கு நிரூபிக்க வேண்டும். இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆட்டம். இதற்கு முன்னதாக 80, 90 ரன்கள் எல்லாம் அடித்திருக்கிறேன். ஆனால், சதமாக அதை மாற்ற முடியவில்லை. இன்று கவலை இல்லாமல் விளையாடினேன். உமேஷ் யாதவ் மற்றும் ஷமியிடம் நான் சதமடிக்கும் வரை விளையாட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சர்வதேசப் போட்டிகளில் எனது முதல் சதத்தை என் அம்மாவுக்குச் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன். அவர்கள்தான் நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்” என்றார். ஜடேஜாவின் 17-வது வயதில் அவரது அம்மா காலமாகிவிட்டார். 

ரன் அவுட்

ஹெட்மெயர் ரன் அவுட் குறித்துப் பேசிய ஜடேஜா,  ``பந்தை நான் எடுக்கும்போது இரண்டு பேட்ஸ்மேன்களும் எதிர்பக்கத்தில் இருந்தனர். அதனால் நிதனமாக வந்தேன். அங்கு இருந்த வெப்பமான சூழலில்  ஹெட்மெயர் ஓடி வரமாட்டார் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் அவர் திடீரென்று ஓடி வந்துவிட்டார்” என்றார் சிரித்தபடியே.  ஜடேஜாவின் நிதானம், கோலி மற்றும் அஷ்வின் ஆகியோரை  கடுப்பேற்றியது குறிப்பிடத்தக்கது.