வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:53 (06/10/2018)

`இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி!’ - ராஜ்கோட்டில் புதிய வரலாறு #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி வீரர்கள்

Photo Credit: Twitter/@bcci

ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் ப்ரித்வி ஷா, கேப்டன் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதமடித்து அசத்தினர். பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும் கீமோ பால் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

முந்தைய நாள் ஸ்கோருடன் ஆட்டத்தைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, சேஸ் - கீமோ பால் ஜோடி சரிவிலிருந்து மீட்கப் போராடியது. இந்த இணை 6வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தது. கீமோ பால் 47 ரன்களும் சேஸ் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்கவே, அந்த அணி மீண்டும் பேட் செய்யக் களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் கலக்கவே, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து தடுமாறினர். தொடக்க வீரர் கிரண் பவல் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தாலும், மறுமுனையில் அவருக்கு சரியான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. கிரண் பவுல் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50.5 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய வெற்றியாகும். பந்துவீச்சாளர்கள் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3, அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 16 விக்கெட்டுகளைச் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்திய இந்திய இளம்வீரர் ப்ரித்வி ஷா, ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.