வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (07/10/2018)

கடைசி தொடர்பு:09:13 (07/10/2018)

‘முரளி விஜய் இப்படி பேசலாமா?’ - அதிருப்தியில் பிசிசிஐ

இந்தியக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழு குறித்து கருத்து தெரிவித்த கருண் நாயர், முரளி விஜய் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முரளி விஜய்

விராட் கோலி தலைமையிலான இந்தியக்கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத்தொடரில் முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆசியக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் சோபிக்காததால் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து அதிரடியாக கழற்றிவிடப்பட்டார். இங்கிலாந்து தொடரில் விராட் கோலியை தவிர பிற பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவரது பெயர் இடம்பெறாததால் அதிருப்தியடைத்தவர் தேர்வுக்குழு குறித்து கடந்த சில நாள்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தேர்வுக்குழு தலைவரோ, உறுப்பினர்களோ என்னை தொடர்புக்கொள்ளவில்லை நீக்கத்திற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை என முரளி விஜய் பேசியிருந்தார்.

கருண் நாயர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக 300 ரன்கள் குவித்த இரண்டாவது இந்தியக் கிரிக்கெட் வீரர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 303 ரன்களை குவித்து அசத்தினார். அன்றைய தினங்களில் ‘ஹாட் டாக்’ கருண் தான். இந்திய அணிக்கு அட்டகாசமான ஒரு வீரர் கிடைத்து விட்டார் என முன்னணி வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதன்பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடைசியாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் களமிறங்கினார். அதில் 5 ரன்களில் அவுட் ஆனார். இவருக்கு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. ஆனால் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருண் நாயர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், “ முரளி விஜய், கருண் நாயர் இருவரும் தேர்வுக்குழு ஒப்பந்தத்தை மீறிவிட்டனர். ஒப்பந்தம் படி நடந்து முடிந்த தொடர் குறித்து 30 நாட்களுக்குள் எந்த ஒரு வீரரும் கருத்து தெரிவிக்கக்கூடாது. வரும் அக்டோபர் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ள கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்துப் பேசப்படும். கருண் நாயர் இளம்வீரர் ஏதோ பேசுகிறார். முரளி விஜய் மூத்த வீரர் அவரது பேச்சு தேர்வுக்குழுவினரை காயப்படுத்திவிட்டது” என்றனர்.