வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (07/10/2018)

கடைசி தொடர்பு:10:47 (07/10/2018)

‘வீரர்களின் மனைவிகளுக்கு முழு அனுமதி வேண்டும்’ - பிசிசிஐக்கு விராட் கோலி கோரிக்கை

வெளிநாட்டு சுற்றுப்பயண போட்டிகளின் போது வீரர்களுடன் அவர்களின் மனைவிகளும் முழுமையாகத் தங்க அனுமதி வேண்டும் என விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். 

விராட்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த வியாழன் அன்று தொடங்கிய முதல் போட்டியில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 649 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 196 ரன்களுக்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் போட்டிகளின் போது, வீரர்களின் மனைவிகளும் அவர்களுடன் முழுமையாகத் தங்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது வெளிநாடுகளுக்கு விளையாடச் செல்லும் வீரர்களுடன் அவர்களின் மனைவிகள் 2 வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் இதை மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் விராட். 

சில வாரங்களுக்கு முன்பே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. “ இந்த கோரிக்கை முன்வைக்கபட்டது உண்மை தான், ஆனால் இது தொடர்பான முடிவுகளை விரைவில் நாங்கள் எடுக்க போவதில்லை. புதிய அதிகாரிகளுக்கு இது குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பை வழங்க இருக்கிறோம். தற்போதுள்ள முறையில் எந்த மாற்றமும் இல்லை” என அணியின் நிர்வாக குழு தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் இந்திய அணியின் மேலாளர் இதை ஒரு கோரிக்கையாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தன் நீண்ட நாள் காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார் விராட் கோலி. அதன் பின் விராட் செல்லும் அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கும் அனுஷ்கா உடன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.