வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (07/10/2018)

கடைசி தொடர்பு:16:07 (07/10/2018)

`கிரிக்கெட்டுக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது!’ - நெகிழும் கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 

கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்ததால், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்டும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரிமியர் லீக் உள்ளிட்டவை உலக அளவில் பிரபலமான டி20 கிரிக்கெட் லீக் தொடர்களாகும். உலக அளவில் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒருவரேனும் நிச்சயம் இடம்பெற்றிருப்பர். அதிலும் குறிப்பாக அதிரடி காட்டும் கிறிஸ் கெய்ல், ஆல் ரவுண்டர்களான பிராவோ, ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட வீரர்களை தங்கள் அணிக்குக் கொண்டுவர பெரும்பாலான அணியின் உரிமையாளர்கள் முழு முயற்சி எடுப்பதுண்டு. 

அந்தவகையில், டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்கா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். அந்நாட்டின் உள்ளூர் தொடரான ரீஜனல் சூப்பர் 50 தொடரில் நேற்று நடைபெற்ற பார்படாஸ் அணிக்கெதிரான போட்டியுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கெய்லுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் வீரர்கள் அனைவரும், தங்களது பேட்டை உயர்த்தி அவர் பேட்டிங் செய்யக் களமிறங்கியபோது மரியாதை செலுத்தினர். மேலும், அந்த அணியின் கேப்டன் நிகிதா மில்லர், நேற்றைய போட்டியில் கேப்டன்ஷிப் பொறுப்பை கெய்லிடம் ஒப்படைத்தார். தனது கடைசி லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடிய கெய்ல், 114 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உள்ளூர் 50 ஓவர் கிரிக்கெட்டில் கெய்ல் அடிக்கும் 27வது சதம் இதுவாகும். முதலில் பேட் செய்த ஜமைக்கா அணி, கெய்ல் சதத்தின் உதவியுடன் 226 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய பார்படாஸ் அணி, 193 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி வெற்றிபெற்றது. இந்தபோட்டியில் கெய்ல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார். 

போட்டிக்குப் பின்னர் பேசிய கிறிஸ் கெய்ல், ``ஜமைக்கா அணிக்காக விளையாடிய கடைசிப் போட்டியில்  சதமடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த தருணத்தை வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. அதேபோல் கேப்டனாக இருந்து அணியை வெற்றிபெறச் செய்ததும் மனதுக்கு நெருக்கமான ஒன்று. 39 வயதான பின்னரும் ஜமைக்கா அணிக்காக விளையாடிய கடைசிப் போட்டியில் சதமடித்தது நெகிழ்ச்சிகரமானது. வாய்ப்பு கிடைத்தால் ஜமைக்கா அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் (4 நாள் போட்டி) விளையாட ஆர்வமாக இருக்கிறேன். 

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட்டுக்கும் அப்பால் வாழ்க்கையில் நிறையவே இருக்கிறது. 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது தனிப்பட்ட முறையில் சாதனையாக இருந்தாலும், இப்போது எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்களுடம் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனது குழந்தையை வளர்ப்பதற்கும், அது வளர்வதைப் பார்ப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசி முடித்தார்.