`தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன்!' - ஆசியக் கோப்பையில் கம்பேக் கொடுத்த இந்திய ஜூனியர் அணி #AsiaCupU19 | AsiaCupU19: India beats SL by 144 runs and claims title for the 6th time

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:08:23 (08/10/2018)

`தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன்!' - ஆசியக் கோப்பையில் கம்பேக் கொடுத்த இந்திய ஜூனியர் அணி #AsiaCupU19

ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி கோப்பையை வென்று சாதித்தது. 

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி

வங்கதேசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க வீரர்களான யாஷவி ஜெய்ஸ்வால் 85 ரன்களும், அனுஜ் ராவத் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தேவ்தவ் படிக்கல் 31 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி 40.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்திருந்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் சிம்ரன் சிங் மற்றும் ஆயுஷ் படோனி ஜோடி 9.1 ஓவர்களில் 110 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. சிம்ரன் சிங் 65 ரன்களுடனும், ஆயுஷ் படோனி 52 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி கேப்டன் நிபுன் தனஞ்செயாவின் விக்கெட்டைத் தொடக்கத்திலேயே இழந்தது. 12 ரன்கள் சேர்த்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் மொஹித் சங்க்ரா பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய இந்திய பௌலர்கள், இலங்கை அணியை 38.4 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருட்டினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய ஜூனியர் அணி, 6வது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. 

ஆசியக் கோப்பை தொடரைத் தொடர்ச்சியாக 5 முறை வென்ற இந்திய ஜூனியர் அணி, கடந்தாண்டு மலேசியாவில் நடைபெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டிக்குக் கூட தகுதிபெறவில்லை. இந்த முறை மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் கொடுத்திருக்கிறது இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி. சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசியக் கோப்பை சீனியர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close