வெளியிடப்பட்ட நேரம்: 05:01 (08/10/2018)

கடைசி தொடர்பு:07:33 (08/10/2018)

இளையோர் ஒலிம்பிக் போட்டி - இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்!

இளையோருக்கான ஒலிம்பிக் தொடரில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவைச் சேர்ந்த துஷர் மானே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இளையோருக்கான ஒலிம்பிக்

கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் 69 பேர் 13 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு துப்பாக்கிச் சூடு போட்டியில், இந்தியா சார்பில் துஷர் மானே கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் 247.5 புள்ளிகளைப் பெற்ற அவர், இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ரஷ்யாவின் கிரிகோரி ஷகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், செர்பியாவின் அலெக்சா மிட்ரோவிக் 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்தத் தொடரில் முதல் பதக்கத்தை துஷர் பதிவு செய்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்றது. இதில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.