வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:13:00 (08/10/2018)

`ஆசியக்கோப்பையைக் கொடுத்தது ரோகித்; சொன்னது தோனி ’ - மறக்க முடியாத தருணம் கலீல் நெகிழ்ச்சி

ஆசியக்கோப்பை

`தோனி’ இந்தியக் கிரிக்கெட்டின் மந்திரச்சொல். கேப்டன்ஷிப் என்ற பொறுப்பை கொடுத்துவிட்டாலும் சக வீரர்களுக்கு அவர் இப்போதும் கேப்டன்தான். இதைத் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, `தோனிதான் எப்போதும் எனது கேப்டன்’ எனப் பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. விராட்கோலி இந்தத் தொடரில் விளையாடவில்லை கேப்டன்ஷிப் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்குக் கொடுக்கப்பட்டது. இளம்வீரர்களுக்கு இந்தத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ஆசியக்கோப்பையை இளம்வீரர் கலீல் அஹமது கையில் ஏந்தி இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.  

இதுகுறித்து கலீல் அஹமது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் ரோகித் ஷர்மாதான் கேப்டன் பொறுப்பை வகித்தார். பரிசளிப்பு விழாவின் போது தோனி, ரோகித் ஷர்மாவிடம் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ள இளம்வீரரிடம் கோப்பையைக் கொடுக்குமாறு கூறினார். ரோகித் என்னிடம் கோப்பையைக் கொடுத்தார். நான் அணியில் மிகக் குறைந்த வயதுடைய வீரர் மேலும் ஆசியக்கோப்பை தொடரில்தான் நான் அறிமுகமானேன். தோனி, ரோஹித் இருவரும் என்னிடம் ஆசியக்கோப்பையை அளித்தனர். அந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான் எமோஷனல் ஆகிட்டேன் இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம்’ எனத் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் ஹாங் காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் கலீல் விளையாடினார்.