வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (08/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (08/10/2018)

காதல்... திருமணம்..! மனம் திறந்த சாய்னா நேவால்

ந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஒலிம்பிக், காமென் வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். சாய்னாவின் சாதனைகளுக்குப் பிறகு, இளைஞர்கள் பலரும் பேட்மின்டன் போட்டியில் கலந்துகொள்ளத் தொடங்கினர்.

சாய்னா நேவால்

சாய்னாவும் சக பேட்மின்டன் வீரரான காஷ்யப்பும் 10 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகவும் வரும் டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனது காதல் திருமணம் குறித்து முதல் முறையாக, சாய்னா நேவால் மனம் திறந்துள்ளார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “2008-ம் ஆண்டு முதல், நானும் காஷ்யப்பும் வெளிநாடுகளில் நடைபெறும் பேட்மின்டன் தொடர்களில் பங்கேற்கச் சென்றோம். நண்பர்களாக இருந்த நாங்கள் ஒன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டோம், போட்டிகளில் கலந்துகொண்டோம். இருவருக்கும் இடையேயான அன்பு அதிகரித்தது” என்று 10 வருட காதலின் ஆரம்பப் புள்ளியை விளக்கினார்

``பேட்மின்டனில்  தீவிரம் காட்டியபோது, திருமணம் குறித்த பிளான் இல்லை. 2018 காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. டிசம்பர் மாதத்தில் நேரம் சரியாக அமைந்ததால், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்” என்று சில தகவல்களை சாய்னா பகிர்ந்துள்ளார். டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்க இருப்பதால், சாய்னா - காஷ்யப்  பிஸியாகிவிடுவர். எனவே, டிசம்பர் 16-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சாய்னா தெரிவித்துள்ளார்.